கவலைப்படுறீங்களா? கண்டிப்பா இதுதான் கிடைக்கும்!

'எங்கெங்கு காணினும் ஹாஸ்பில்டா' - ஊரெங்கும் மருந்துவமனைகளாகி விட்ட காலம் இது. உடம்புக்கு என்ன ஆனாலும் டாக்டர் சரி செய்து விடுவார் என்று தைரியமாக இருக்கிறீர்களா? மருத்துவர்களால் உங்கள் உடற்கூறை முற்றிலும் மாற்றியமைக்க இயலாது. அவர்களால் ஓரளவே உதவ இயலும். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பார்கள். மனக் கவலை பல்வேறு உடல்நலக் கேடுகளுக்கு காரணமாகிறது. 'அவருக்கு உடம்பு சரியில்லாம போச்சு... ஆனாலும் மன உறுதி ஜாஸ்தி. மீண்டு வந்திட்டாரு' என்று சொல்ல கேட்கிறோமல்லவா! 'உள்ளம் உறுதியாக இருந்தால் நோயிலிருந்து மீள்வது எளிது' என்று மருத்துவர்களும் கூறுகிறார்கள். அன்றாட நடவடிக்கைகளுக்கும் உடல் நலத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆரோக்கியத்தை காத்துக்கொள்வதற்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும்?


கொஞ்சமா கவலைப்படுங்க

எல்லா மனுஷங்களுக்கும் பிரச்னை உண்டு. அவரவர் நிலைக்கேற்ப சவால்கள் இருக்கும். கவலையே இல்லாதவர் என்று யாருமே கிடையாது. 'கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக்கூடாது' என்பார்கள். எவ்வளவு பெரிய இழப்பென்றாலும் மனமுடைந்து போகக்கூடாது என்பதே அதன் பொருள். பிரச்னை எழுந்தால் மனமுடைந்து போகாதீர்கள். தைரியமாக எதிர்கொள்ளுங்கள்; துணிந்து போராடுங்கள்; மேற்கொள்ள முடியும். குறைவாக கவலைப்படுபவர்கள் நீண்டகாலம் வாழ்வார்களாம்.

மன்னிச்சிருங்க; மனசு லேசாயிரும்

'எனக்கு இப்படி பண்ணிட்டாரே... இருக்கட்டும்... எனக்கும் காலம் வரும். அப்போ பார்த்துக்கறேன்...' - இந்த வகை வைராக்கியம் மனதை பாரமாக்கிவிடும். பயனுள்ள வகையில் எதையும் செய்ய இயலாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருப்போம். ஆகவே, துரோகங்கள், சந்தர்ப்பவாதங்கள் அத்தனையையும் புறந்தள்ளி விட்டு முன்னேறுவோம். உணர்வுபூர்வமான சுமைகள் முன்னேற்ற பயணத்தில் பாரமாக இருக்கும். மனதை வருத்தக்கூடிய நம்பிக்கை துரோக செயல்களை மன்னித்து விடுங்கள். மனம் இலேசாகும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

சாதகமற்ற சூழலில் தைரியமாயிருங்க

சூழ்நிலை எதிராக இருந்தால் மனமுடைந்து போகாதீர்கள். பாதி முயற்சியில் சோர்ந்து போனால் உழைப்பு வீணாகிவிடும். சிரமப்பட்டு கூட்டைக் கிழித்து வெளியே வரும் வண்ணத்துப்பூச்சியே வானை அலங்கரிக்கிறது. ஆகவே, தடைகளை கண்டு அஞ்சாதீர்கள். நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து நடந்து பாதகங்களை மிதித்துச் செல்லுங்கள். கவலைப்பட்டு கலங்கினால் முயற்சி மட்டுமல்ல; உடல் நலமும் பாதிப்புக்குள்ளாகும்.

விருப்பமானதைச் செய்ங்க

பயம், கோபம், வெறுப்பு, குற்றவுணர்வு இவை அனைத்துமே செயல்வேகத்தை முடக்குபவை. இந்த உணர்வு தளைகளை கடந்து சாதனை உச்சத்தை தொடுவதற்கு உங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுங்கள். எழுதுதல், வரைதல், உரையாற்றுதல், ஆவண படங்கள், குறும்படங்கள் தயாரித்தல், கைவினை பொருள்கள் செய்தல் போன்ற உங்கள் விருப்பத்திற்கேற்ற படைப்புகளை உருவாக்கலாம். அவை மனதை முடக்கும் உணர்வுகளை கடக்க உங்களுக்கு உதவும். மனம் மட்டுமல்ல, உடலும் ஆரோக்கியமாக விளங்கும்.

'முடியாது'ன்னு மட்டும் சொல்லாதீங்க

வாழ்க்கை சாதனை குறித்த கனவுகள் கருக்கொண்டு செயல்வடிவம் பெற்று தடைகளை தாண்டி இலக்கை எட்டுவதற்கு தன்னம்பிக்கையும் பொறுமையும் அவசியம். கனவு பார்ப்பதற்கு பிரமாண்டமாக தெரியலாம். ஆனால், அதை அடைந்திட இயலும். 'இதையா, நானா?' என்று மலைத்துப் போய் மனந்தளர்ந்து விடாதீர்கள். பதற்றமடையாதீர்கள். அது நரம்புகளை பலவீனமாக்கும். நிதானத்துடன் விவேகமாக முடிவெடுங்கள். சும்மா கெத்தா சாதிப்பீங்க!

உயர்இரத்த அழுத்தம் இருந்தால் சர்க்கரைநோய் வருமா?

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email