நாளை இடைத்தேர்தல் முடிவு! எடப்பாடி அரசு பிழைக்குமா?

Admk govt may fall depending on bypoll results

by எஸ். எம். கணபதி, May 22, 2019, 10:30 AM IST

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள், மொத்தம் 45 மையங்களில் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.

சட்டமன்றத்தில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 234. தற்போதுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை 212. இதில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 97 மற்றும் சுயேச்சை டி.டி.வி.தினகரனை கழித்தால் மீதி 114 பேர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். எனவே, இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 3ல் மட்டுமே அ.தி.மு.க. வென்றாலும் மெஜாரிட்டிக்கு தேவைப்படும் மேஜிக் நம்பர் 117ஐ தொட்டு விடலாம்.

எனினும், அ.தி.மு.க. உறுப்பினர்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதே சமயம், அவர்கள் தாங்கள் அ.தி.மு.க. உறுப்பினர்கள் என்றே சொல்லி வருகிறார்கள். காரணம், அவர்களுக்கு கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதே போல், தமிமுன் அன்சாரியும், கருணாசும் தேர்தலின் போது அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்டார்கள். அதனால், இந்த 5 பேரும் தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப மாறிக் கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே சபாநாயகர் தனபால் மீது அரசியல் சட்டப்பிரிவு 179(அ)ன் கீழ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. கொடுத்திருக்கிறது. சட்டசபை கூடும் போது அதை முதலில் எடுக்க வேண்டுமென்று தி.மு.க. வலியுறுத்தும். அதே போல், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க., அதிக இடங்களை கைப்பற்றினாலும் எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும். மேலும், எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடுமாறு ஆளுநரிடம் மனு கொடுக்கும். இதெல்லாம் எடப்பாடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். ஆட்சி கவிழ்வதற்கும் வாய்ப்பு ஏற்படும்.

அதேசமயம், மத்தியில் பெரும்பான்மை அரசாக மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்து விட்டால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு பொதுக்கூட்டத்தில், ‘எல்லாவற்றையும் மேலே இருப்பவர் பார்த்து கொள்வார்’ என்று சொன்னது போல் மோடி அரசு, தமிழகத்தில் உள்ள இந்த அரசு விழாமல் பார்த்து கொள்ளும். எப்படி என்றால், எடப்பாடி பழனிச்சாமியை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் புரோகித் உத்தரவிட மாட்டார். மேலும், கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரும் சரி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சரி, அரசுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள். அதனால், அரசு கவிழ வாய்ப்பில்லை.

அதே சமயம், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால், இப்போது பா.ஜ.க. அரசுக்கு தலையாட்டும் ஆளுநர் புரோகித், அப்போது புதிய ஆட்சிக்கு தலையாட்டத் தொடங்கி விடுவார். ஒரு வேளை ஆளுநரே மாறி விடலாம். அப்போது எடப்பாடி அரசை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் உத்தரவிடும் நிலைமை வரலாம்.

அந்த சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கவும் அரசு தயாராக இருக்க வேண்டும். தற்போது இந்தியா டுடே உள்ளிட்ட சில கருத்து கணிப்புகளில் தி.மு.க.வுக்கு 14 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும் அ.தி.மு.க.வுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் மற்றவை இழுபறி என்றும் கூறப்பட்டிருக்கிறது. ‘‘கணிப்புகள் எல்லாம் பொய்யாகி விடும். அ.ம.மு.க. கட்சியே அதிக இடங்களை பிடிக்கும்’’ என்று டி.டி.வி.தினகரன் கூறி வருகிறார்.

ஒருவேளை தி.மு.க. 20 தொகுதிகளில் வென்றால், தற்போதுள்ள 97 எண்ணிக்கையுடன் சேர்த்து மெஜாரிட்டிக்கான 117 இடங்களை பெற்று ஆட்சியை எளிதாக பிடித்து விட முடியும். ஆனால், தி.மு.க. 19 இடங்களில் வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகம். அதே சமயம், அ.தி.மு.க. 8 தொகுதிகளில் வென்று விட்டால், கருணாஸ் உள்பட 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாமலேயே அரசு பிழைத்து விடும். ஆனால், 22 தொகுதிகளில் எட்டுக்கு குறைவான தொகுதிகளில் அ.தி.மு.க. வென்றால் ஆட்சி கவிழ்ந்து விடும்.
காரணம், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்து, ஆளுநர் அதற்கு தலையாட்டத் தொடங்கினால், எடப்பாடி பழனிச்சாமியை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டு விடுவார். அப்போது சட்டசபையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழ்ந்து விடும்.

எனவே, மத்தியில் யார் ஆட்சிப் பீடத்தில் உட்கார்கிறார்களோ, அதைப் பொறுத்தே தமிழக அரசியலிலும் மாற்றம் நிகழும் என்பதில் சந்தேகமில்லை!

You'r reading நாளை இடைத்தேர்தல் முடிவு! எடப்பாடி அரசு பிழைக்குமா? Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை