இரத்த அழுத்தத்தை காட்டும் செல்ஃபி வீடியோ

Measuring blood pressure through video selfie

by SAM ASIR, Aug 9, 2019, 16:19 PM IST

இரத்த அழுத்தத்தை அடிக்கடி சோதிக்க வேண்டியிருப்போருக்கு, ஸ்மார்ட்போனில் எடுக்கும் செல்ஃபி வீடியோ மூலம் இரத்த அழுத்த அளவுகளை அறிந்துகொள்ளலாம் என்ற நற்செய்தி கிடைத்துள்ளது.


உயர் இரத்த அழுத்தம் இதய நோய்க்கு காரணமாகிறது. தொடர்ந்து உறுப்புகள் செயல்படாத நிலை மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு ஒழுங்கான இடைவெளிகளில் இரத்த அழுத்தத்தை கணக்கிடுவது முக்கியம்.


பொதுவாக நாம் மருத்துவமனைகளில் பார்க்கும், கைகளில் மாட்டி அழுத்தத்தை கணக்கிடும் கருவிகளே துல்லியமான அளவீடுகளை தரும். ஆனால், பயன்படுத்துவோர் உரிய வழிகாட்டும் முறைகளையோ, ஒன்றுக்கு பல முறை கணக்கிட வேண்டும் என்பதையோ கைக்கொள்வதில்லை. மேலும் அக்கருவிகள் பயன்படுத்த எளிதாக இல்லை என்று பலர் கருதுகின்றனர்.


அமெரிக்க மிக்ஸிகன் பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராமகிருஷ்ணா முக்கமாலா என்ற பேராசிரியர் உறுப்பினராக உள்ள குழுவினர் டிரான்ஸ்டெர்மல் ஆப்டிகல் இமேஜிங் என்ற மென்பொருளை பயன்படுத்தி ஐபோனில் எடுக்கப்பட்ட செல்ஃபி வீடியோ மூலம் இரத்த அழுத்த அளவுகளை கணக்கிட்டுள்ளனர்.
செல்ஃபி வீடியோ எடுக்கும்போது ஒளியானது சருமத்தின் மேற்புற தோலை துளைத்து உள்ளே செல்கிறது. இது ஸ்மார்ட்போனிலுள்ள டிஜிட்டல் ஆப்டிகல் உணரிகள் இரத்த ஓட்டத்தின் அழுத்தத்தை பதிவு செய்துகொள்ள போதுமானது.


இந்த ஆய்வு குழுவினர் கனடா மற்றும் சீனாவை சேர்ந்த 1,328 பேரின் செல்ஃபி வீடியோவை கொண்டு இரத்த அழுத்தம் அளவை கணக்கிட்டுள்ளனர். இதயம் சுருங்கும்போது (சிஸ்டாலிக்), இரத்தத்தால் நிறைந்திருக்கும்போது (டயஸ்டோலிக்) மற்றும் அவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் ஆகியவற்றை டிரான்ஸ்டெர்மல் ஆப்டிகல் இமேஜிங் முறைப்படி கணக்கிட்டு, கைகளில் மாட்டும் கருவி கொண்டு செய்யப்பட்ட துல்லிய அளவீடுகளுடன் ஒப்பிட்டுள்ளனர்.


நவீன முறைப்படி எடுக்கப்பட்ட அளவீடுகளில் இதயம் சுருங்கும்போது எடுக்கப்படும் அளவு 95 விழுக்காடு துல்லியமானதாகவும், இதயம் இரத்தத்தால் நிறைந்து இளைப்பாறும் நிலையில் எடுக்கப்பட்ட அளவீடு 96 விழுக்காடு துல்லியமாக இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.


இப்பரிசோதனை ஆய்வக சூழலில் செய்யப்பட்டுள்ளபடியினால், வீடுகளில் இப்புதிய தொழில்நுட்பத்தினால் எடுக்கப்படும் அளவீடுகள் எந்த அளவுக்கு துல்லியமாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதய பாதிப்பின் அறிகுறிகள் எவை தெரியுமா?

You'r reading இரத்த அழுத்தத்தை காட்டும் செல்ஃபி வீடியோ Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை