முதுகெலும்பின்மேல் அக்கறையா? இவற்றில் கவனமாயிருங்கள்!

Spine Health - 8 Everyday Activities That Are Actually Harming It!

by SAM ASIR, Jul 9, 2019, 18:45 PM IST

வாழ்க்கைமுறை மாற்றத்தால், நாம் வீட்டில் செய்யும் சில செயல்களே உடற்பயிற்சியாகவும் அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டுவேலைகளை உரிய கவனத்துடன் செய்தால், அவை உடலுக்கு நன்மை செய்யும்; அதேவேளையில் கவனக்குறைவால், தவறான முறையில் வேலைகளை செய்தால் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அன்றாடம் செய்யும் இந்த வேலைகளை சரியாக செய்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள்.

பைகள்: கடைகளுக்குப் போய் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி வரும்போது, இரண்டு பைகளுக்கான விலையை கொடுப்பதற்குப் பதிலாக, பெரிதாக ஒரே பையை வாங்குவது சிக்கனம் என்று யோசித்து, பெரிய பையில் அனைத்தையும் அடைத்து ஒரே பக்கமாக தூக்கிக் கொண்டு வருவதால், முதுகெலும்பு பாதிக்கப்படக்கூடும். இரண்டு சிறிய பைகளை வாங்கி, பொருள்களை சமமாக பகிர்ந்து தூக்கி வருவது முதுகெலும்புக்கு இருபக்கமும் சமமான அழுத்தத்தை கொடுக்கும்; முதுகெலும்பு பாதிக்கப்படாது.

தரையை சுத்தம் செய்தல்: வீட்டில் தரையை சுத்தம் செய்வது வழக்கமான பணி. தரையில் உட்கார்ந்து துணியைக் கொண்டு துடைக்கலாம் அல்லது நேராக நின்று கொண்டு துடைப்பானை (mop) பயன்படுத்தலாம். மாறாக, குனிந்து நின்று துணியை கொண்டு தரையை துடைப்பது ஆரோக்கியமான வழக்கமல்ல. முதுகெலும்பின்மேல் அதிக அழுத்தம் படிந்து பாதிப்பை உருவாக்கும்.

ஷூ லேஸ் கட்டுதல்: உட்கார்ந்து கொண்டு காலணி (ஷூ)யின் நூல்களை (lace) கட்டுவது கடினமானதுதான். ஆனால், குனிந்து நின்று கட்டுவது தவறானது. நின்றபடியே குனிந்து லேஸ்களை கட்டி வந்தால் நாள்போக்கில் முதுகெலும்பில் பாதிப்பு உண்டாகும்.
பாத்திரங்களை கழுவுதல்: குனிந்து பாத்திரங்களை கழுவுதல் கூடாது. அது முதுகெலும்பு வட்டுகள் மேல் அழுத்தத்தை உண்டாக்கி அவற்றை பாதிக்கும். முட்டிக்கால் அளவு உயரமுள்ள ஒரு ஸ்டூலை வைத்து, இரண்டு கால் முட்டிகளையும் மாற்றி மாற்றி அந்த ஸ்டூல்மேல் வைத்துக்கொண்டு கழுவுவது முதுகெலும்பு வட்டுகள் பாதிப்படையாமல் காக்கும்.

வாஷ்பேஸின்: வாஷ்பேஸினில் குனிந்து நின்றபடி பல் துலக்கி, வாய் கொப்பளித்தல் மற்றும் முகம் கழுவுதல் ஆகிய செயல்கள் முதுகெலும்புக்கு பாதிப்பை உண்டாக்கும். கைகளை அருகிலுள்ள சுவற்றின்மேல் வைத்துக்கொண்டு அல்லது வாஷ்பேசின் கோப்பையின்மேல் வைத்துக்கொண்டு கழுவுவது முதுகெலும்பின்மேல் அதிக அழுத்தம் விழாமல் பாதுகாக்கும்.

அலுவலகம் மற்றும் பள்ளிப் பைகள்: தோளின் ஒருபக்கமாக முதுகு பையை தூக்கிப் போட்டுக்கொண்டு செல்லுதல் எளிதானதாக தோன்றலாம். பள்ளிக்கூட பைகள் உள்ள பைகள் அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வைத்திருக்கும் அலுவலக பை போன்றவற்றை ஒருபக்கமாக போடுவதால், அந்தப் பக்கம் மட்டும் அழுத்தம் உண்டாகும். இரண்டு கைகளின் வழியாகவும் பைகளை மாட்டி முதுகில் போடுவதால், எடை இருபக்கமும் சமமாக பிரியும்.

அமருதல்: ஒரே இடத்தில் நீண்டநேரம் அமர்ந்திருத்தல் நாள்போக்கில் முதுகெலும்பில் பாதிப்பை உருவாக்கும். ஆகவே, குறுகிய நேர இடைவேளைகளை எடுத்துக்கொண்டு எழுந்து நடந்து வருவது நல்லது.

படுக்கை: மிருதுவான படுக்கைகளையே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், அது முதுகெலும்புக்கு நன்மை பயக்காது. காலையில் உற்சாகமாக எழும்ப இயலாது. முதுகெலும்புக்கு ஆதரவாக இருக்கக்கூடிய படுக்கையை தேர்ந்தெடுத்துப் பாருங்கள்; வித்தியாசத்தை உணர முடியும்.

அன்றாட வேலைகளை கவனமாக செய்தால், முதுகெலும்பு பிரச்னைகளை தவிர்க்கலாம்.

You'r reading முதுகெலும்பின்மேல் அக்கறையா? இவற்றில் கவனமாயிருங்கள்! Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை