நீரிழிவு பாதிப்புள்ளோர் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அவ்வப்போது சோதித்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம். சர்க்கரையின் அளவை கவனிக்காமல் விட்டுவிடுவது பல பின்விளைவுகளுக்குக் காரணமாகிவிடும். அநேகர் வீட்டிலேயே குளூக்கோமீட்டரை கொண்டு இரத்தத்தில் சர்க்கரையை அளவிடுவர். அப்படி அளவிடும்போது சில விஷங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உணவுக்கு பின்
உணவுக்குப் பின் சர்க்கரை அளவை எடுக்கும்போது (Postprandial) நீங்கள் சாப்பிட்டு முடித்த நேரத்திலிருந்து கால அளவை கணக்கிடுவதற்குப் பதிலாக, சாப்பிட ஆரம்பித்த நேரம் முதல் கால அளவை கணக்கிட்டு இரத்தத்தை பரிசோதிப்பதே சரியான முறையாகும்.
வெவ்வேறு நேரம்
இரத்த சர்க்கரையின் அளவை சரியானவிதத்தில் கணக்கிடுவதற்கு, ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் சோதனை செய்வது நலம். நாள் முழுவதும் சுற்றுச்சூழல் மற்றும் உடலியல் செயல்பாட்டு காரணிகள் மாறிக்கொண்டே இருப்பதால் வெவ்வேறு நேரங்களில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறதென்று சோதிப்பது நல்லது.
விரல்
தொடர்ந்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதிப்பவர்கள், ஒரே விரலில் சோதிக்கும் தவற்றை செய்கின்றனர். தினமும் ஒரே விரலில் குத்தி இரத்தம் எடுப்பது வலியை கொடுக்கும். சிறு காயம் கூட ஏற்படலாம். அதற்காக இரண்டு கைகளிலும் வெவ்வேறு விரல்களில் குத்தி இரத்தத்தை சோதிப்பது நலம்.
ஊசி
சிலர் ஒரே ஊசியை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பயன்படுத்துகின்றனர். இரத்த சர்க்கரை அளவை சோதிப்பதற்காக குத்துவதற்கு பலமுறை ஒரே ஊசியை பயன்படுத்துவது நோய்த்தொற்று ஏற்பட வழிவகுக்கும். ஆகவே, ஒருமுறை பயன்படுத்திய ஊசியை இன்னொரு முறை பயன்படுத்தும் தவற்றை செய்ய வேண்டாம்.
ஆழம்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதிப்பதற்கு ஊசியை குத்தும் சாதனத்தில் வெவ்வேறு ஆழத்தில் ஊசியை குத்தும் வசதி உண்டு. ஒவ்வொருவரின் தோல் மற்றும் விரலின் தடிமனுக்கேற்ப ஊசி குத்தும் நீளத்தை மாற்றிக்கொள்ளலாம். பெரும்பாலும் 3 - 4 என்ற அளவு ஏற்றதாக இருக்கும்.
சுத்திகரித்தல்
இரத்தம் பரிசோதிப்பதற்காக குத்துவதற்கு முன்பு எப்போதும் சானிடைசர் கொண்டு விரலை சுத்திகரிப்பது அவசியம். சானிடைசர் கொண்டு சுத்தம் பண்ணிய உடனே குத்தவேண்டாம். சற்று நிதானித்து சானிடைசர் ஆவியானபிறகு குத்தி இரத்தத்தை சோதிக்கலாம்.
அளவு வேறுபாடு
குளூக்கோமீட்டர் மூலம் கிடைக்கும் இரத்த சர்க்கரை அளவீடுகளில் சில மாற்றங்கள் ஏற்கத்தக்கன. ஆகவே, குறைந்த வேறுபாடுகளை கண்டு பதற்றமடையவேண்டாம்.
இவற்றை கவனித்து செயல்பட்டால் சில தேவையற்ற குழப்பங்கள் ஏற்படாது. சர்க்கரையின் அளவை சரியானவிதத்தில் கண்காணித்து பாதுகாப்பாக இருக்கலாம்.