அவளை திருப்திப்படுத்த என்னால் இயலுமா?

'ஓ...' - நரேஷின் திருமண வரவேற்பில் அலுவலக நண்பர்கள் அத்தனைபேரும் கூச்சல் போட்டனர். நரேஷும் இதற்கு முன்னர் எத்தனையோ நண்பர்களின் திருமணத்தில் கூட்டத்தோடு சத்தம் போட்டிருக்கிறான். 
"டேய் மாப்பிள... சிரிடா..." - கோவிந்த் கத்தினான். அவன் எப்போதும் அப்படித்தான். எங்கு போனாலும் சத்தம் போடுவான்.
 
நரேஷ் தன்னிலைக்கு வந்து சற்று சிரித்து வைத்தான். அவன் உள்ளிருக்கும் பயம் அவனுக்கு மட்டும்தான் தெரியும். இதுவரைக்கும் அவன் யாரிடமும் அதைக்குறித்து பேசியதேயில்லை.
 
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள்! அவன் வேலையைத் தவிர வேறு எதையும் எண்ணவேயில்லை. இரண்டு நிறுவனங்கள் மாறி விட்டான். இரண்டு முறை யுஎஸ் சென்று வந்துவிட்டான். அவனுக்கு இல்லாமல் இருந்தது ஒன்றே ஒன்றுதான்! மனைவி மட்டும்தான் இதுவரை அவனுக்கு இல்லாமல் இருந்தது. 
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு இரண்டு உள்ளன. கார் இருக்கிறது. வங்கியில் போதுமானதற்கு அதிகமாக பணமும் உள்ளது. 
 
அம்மாதான் தினமும், "டேய் கல்யாணம் பண்ணிக்கோடா... நாங்க பேரப்பிள்ளைங்கள பார்த்திட்டு கண்ணை மூடிருவோம்.." என்பாள்.
ஒரு கட்டத்தில் அவன் சரி என்று தலையாட்டிவிட்டான். ஆனால், உண்மையில் கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகு எந்தப் பெண்ணையும், பெண் என்ற நோக்கில் பார்த்ததே இல்லை என்பதையே உணர்ந்தான். 
 
கொலீக்ஸ்! உடன் வேலை செய்பவர்களாக மட்டுமே அவன் பார்த்திருக்கிறான். தன்னை ஓர் ஆண் என்று அவன் வகுத்துக் கொண்டதாகவும் நினைவில்லை. ப்ரோகிராமர், அனலிஸ்ட், பிஎம்பி, டெவலப்பர், ஆர்க்கிடெக்ட்... என்னென்னவோ பதவிகள், பொறுப்புகள். அவைதான் அவன். அவன் தன்னை ஆண் என்று வேறுபடுத்தி பார்த்ததேயில்லை.
 
இதோ, அவன் தன்னை ஆண் என்று நிரூபித்தாக வேண்டிய கட்டம் வந்து விட்டது!
சந்தியா... இதோ, அவன் அருகே அமர்ந்திருக்கிறாளே அவன் புது மனைவி... அவனைப் பற்றி என்ன நினைப்பாள்?
ரிசப்ஷனுக்கு வந்திருந்தவர்கள்மேல் பார்வையை ஓட்டினான் நரேஷ். பள்ளி, கல்லூரி நண்பர்கள், உடன் வேலைபார்க்கும் தோழியர், அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் அவனுக்கு அறிமுகம் இல்லாத, யாரென்றே இதுவரை தெரியாத சந்தியாவின் உறவினர்கள்... கூட்டத்தின் ஓரமாக அவன் பார்வையில் சிக்கினார் லோகநாதன்.
அப்பாவின் நண்பர் மட்டுமல்ல, ஊரில் மருத்துவராக இருப்பவர். சிறுவயதில் நரேஷுக்கு எத்தனையோ முறை வைத்தியம் பார்த்திருக்கிறார். லோகநாதன் டாக்டரிடம் பேச முடியுமா? என்று யோசித்துப் பார்த்தான். 
 
அப்பாவிடம் கேட்டபோது, "அவன் தங்கிட்டு காலைலேதான் போவான்... உன் கல்யாணத்துக்காகவே புறப்பட்டு வந்திருக்கிறான்," என்றார். 
கூட்டம் எல்லாம் கலைந்தபிறகு, டாக்டர் லோகநாதனை தனியே சந்தித்தான். மெல்ல தன் சந்தேகத்தை அவரிடம் கேட்டான்.
"டாக்டர்... எனக்கு முடியுமா?"
"ஏன் முடியாது...?" அவன் தயக்கத்தை புரிந்து கொண்டு நேரடியாக உரையாடலுக்குள் புகுந்தார் அவர்.
 
"இதுவரைக்கும் வேலையை தவிர வேறு எதையும் நினைக்கவில்லை. எப்போதாவது ஏதாவது நினைப்பு வந்தால்கூட, நான் மனதை வேலைக்குள் புதைத்துக் கொள்வேன்..."
"உன்னோட பயம் எனக்கு புரியது நரேஷ். விறைப்புத் தன்மை பிரச்னை அதாவது ஈ.டி. என்று சொல்லப்படுகிற எரைக்டைல் டிஸ்ஃபங்ஷன் குறித்த பயம் ஆண்கள் மத்தியில் இருக்கிறது. உலகம் முழுவதும் 3 கோடி ஆண்கள் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தாம்பத்ய உறவை பாதிக்கக்கூடிய பிரச்னைதான் இது. ஆனால், நீ பயப்படுவதுபோல் எல்லோருக்கும் அது இருக்காது.
 
எப்போதுமே எல்லாருக்கும் தாம்பத்ய உறவு என்பது முழு வெற்றியாக அமையாது. அவ்வப்போது திருப்தி இல்லாமல் முடியலாம். ஆனால், அது இயல்பான ஒன்று. இதுவரைக்கும் தாம்பத்ய உறவில் ஈடுபடாத உனக்கு அந்தப் பயமே அவசியம் இல்லை.
தாம்பத்யத்தில் ஈடுபடுவோரும் பெரிய அளவில் அதைக்குறித்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து ஆண்குறி விறைப்படையாமல், அதன் காரணமாக தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாமல் போனால்தான் அதைக்குறித்து யோசிக்க வேண்டும். ஆனால், மருத்துவத்தில் இதற்கு தீர்வுகள் உள்ளன.
 
முதலில் உன்னைப்போல் வேலை வேலை என்று அலைபவர்களுக்கு, டார்கெட் வைத்து உழைப்பவர்களுக்கு வரும் மனஅழுத்தம், உடல் நலப் பிரச்னைகளான இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம், கணவன் மனைவி இடையே ஏற்படும் மனக்கசப்பு, மது மற்றும் போதை மருந்துகளுக்கு அடிமையானோருக்கான உடல் பெலவீனம், இருதய நோய், அதிக எடை இவை தவிர புற்றுநோய் அல்லது அறுவை சிகிச்சை காரணமாக ஏற்பட்ட உறுப்பு சேதம் இவையெல்லாம் விறைப்புத் தன்மை பாதிப்புக்குக் காரணமாகலாம். இவை தவிர, பல மறைமுக காரணங்கள் இருக்கக்கூடும்.
 
அவற்றையெல்லாம் தகுதிவாய்ந்த மருத்துவர்கள் மட்டுமே அறிந்து கொள்ள இயலும்.
தொடர்ந்து இப்பிரச்னை தாம்பத்ய உறவை பாதிக்காத வரையில், அதை இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் மனம் முழுமையாக தாம்பத்ய உறவில் ஈடுபடக்கூடிய சந்தர்ப்பங்கள் குறைந்து வருகிறது. இணையோடு போதிய நேரத்தை செலவழிக்க வண்டும். தேவையற்ற பயத்தை தவிர்க்க வேண்டும். 
அப்போதும் பிரச்னை தொடர்ந்தால், மருத்துவரை அணுக வேண்டும். தகுதி வாய்ந்த மருத்துவர்கள், விறைப்புத் தன்மை குறைபாட்டுக்கு பின் மறைந்திருக்கும் காரணத்தை கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளிப்பார்கள்.
மனநல ஆலோசனை, காரணமாக இருக்கக்கூடிய வேறு உடல்நல பிரச்னைகளுக்கு சிகிச்சை, இவை தவிர தேவைப்பட்டால், ஹார்மோன் மற்றும் அறுவை சிகிச்சை வரைக்கும் அவர்கள் செய்யக்கூடும்.
 
இப்போதைக்கு உனக்கு இருப்பது தேவையற்ற பயம் மட்டும்தான். ஆகவே, பயப்படாதே... என்ஜாய்!" என்றார்.
விறைப்புத்தன்மை குறைபாடு என்பது இன்றைக்கு பெரிதும் கற்பிக்கப்பட்ட குறைபாடாகவே உள்ளது. வேலையில், பயணத்தில், குடும்ப பிரச்னையில் தைரியமாக செயல்படுவதுபோல, தாம்பத்ய உறவும் நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டிய ஒன்று... வீணான பயத்தை ஒதுக்கிவிட்டு வாழ்க்கையை அனுபவிக்க வாழ்த்துகள்!
 
Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News