16-வது மக்களவையின் கடைசிக் கூட்டம் இன்றுடன் முடிவு - ராஜ்யசபாவில் 'அம்போ' வான முத்தலாக், குடியுரிமை மசோதாக்கள்!

மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய கடைசி நாள் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அமளி காரணமாக ராஜ்யசபாவில் முத்தலாக், குடியுரிமை மசோதாக்கள் நிறைவேற்றப்படாமலே கூட்டத் தொடர் முடிவடைந்தது. இதனால் அந்த மசோதாக்கள் காலாவதி ஆகும் எனத் தெரிகிறது.

இன்றுடன் 16-வது மக்களவையின் கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது. இனி பொதுத் தேர்தல் முடிந்து புதிய எம்.பி.க்கள் பதவியேற்புக்காக அடுத்த கூட்டத் தொடர் தொடங்கும். கூட்டத்தொடரின் கடைசி நாள் என்பதால் அரசுத் தரப்பிலும் சரி, எதிர்க்கட்சிகள் தரப்பிலும் சரி ஒரே பரபரப்பாகவே காணப்பட்டது நாடாளுமன்ற வளாகம்.

ஒரு பக்கம் காங்கிரஸ் எம்பிக்கள் ரபேல் விவகாரத்தில் ஆர்ப்பாட்டம், மற்றொரு தெலுங்கு தேசம் எம்பிக்கள் ஆந்திரா சிறப்பு அந்தஸ்து கேட்டு போராட, சிபிஐ நடவடிக்கைகளை கண்டித்து திரிணமுல் கட்சி எம்பிக்களும் போராட்டம் நடத்தியதால் கடைசி நாளில் நாடாளுமன்றம், போராட்டக்களமாக காட்சியளித்தது.

மக்களவையில் அவசர அவசரமாக பல்வேறு மசோதாக்கள் முன்வைக்கப்பட்டு விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான கணக்குத் தணிக்கை குழுவின் அறிக்கையும் கடைசி நேரத்தில் எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்திற்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது.

ராஜ்யசபாவிலோ சபை தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த ராஜ்ய தலைவரும், துனை ஜனாதிபதியுமான வெங்கய்ய நாயுடு, பட்ஜெட்டுக்கு ஒப்புதல், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதாக அறிவித்து ராஜ்யசபா நடவடிக்கைகள் முடிந்ததாகக் கூறி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

இதனால் இன்று நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட முத்தலாக் மசோதா, குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாக்கள் அவை முன்வைக்கப்படவில்லை. இன்றுடன் 16-வது மக்களவை கூட்டம் முடிவடைவதால் இந்த மசோதாக்கள் காலாவதி ஆகிவிட்டதாகத் தான் அர்த்தம் என்று கூறப்படுகிறது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News