டெல்லி அரியணையில் அமரப்போவது யார்?-கவுண்ட் டவுன் தொடங்கியது..!

Loksabha election result day: Who will form government in centre, countdown starts:

by Nagaraj, May 23, 2019, 07:43 AM IST

மத்தியில் அரியணையில் அமரப்போவது யார்? என்பதற்கான விடை தெரியும் நாள் தான் இன்று .பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளுமா? இல்லை கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சிப் பீடத்தில் அமருமா? என்பதற்கான கவுண்ட் டவுன் இன்று தொடங்கியுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அடுத்த 2 மணி நேரத்தில் முன்னணி நிலவரம் தெரிய வந்து, இதற்கான விடை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை நிர்ணயிக்கும் மக்களவைக்கு 543 பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இதில் மத்தியில் ஆட்சியமைக்க 272 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம். தமிழகத்தின் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி இம்மாதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. சுமார் 90 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.

7 கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகள், ஆந்திரம், ஒடிஸா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், தமிழகத்தில் 22 சட்டப்பேரவை உட்பட சில மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இதன்பின்னர், ஒவ்வொரு தொகுதியிலும் தேர்வு செய்யப்பட்ட 5 வாக்குச்சாவடிகளில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன், வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டு சரிபார்க்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுக்கும் இடையே எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால், ஒப்புகைச் சீட்டுகளே ஏற்றுக் கொள்ளப்படும்.

இந்த சரிபார்ப்பு பணியால், வாக்கு எண்ணும் பணி நிறைவடைய ஏறத்தாழ 4 முதல் 5 மணி நேரம் கூடுதலாக பிடிக்கும். எனவே தேர்தல் முடிவுகள் சற்று தாமதமாகவே தெரிய வரும். முன்னணி நிலவரம் காலை 10 மணி முதல் தெரிய வரலாம். இறுதி முடிவுகள் இன்று மாலை முதல் வெளியாகும் என்றும் சில தொகுதிகளின் முடிவுகள் நள்ளிரவு தாண்டி தான் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்தத் தேர்தலில் தேசிய அளவில் ஆளும் பாஜகவுக்கும், நாட்டை பலமுறை ஆட்சி புரிந்த காங்கிரசுக்கும் தான் போட்டி என்றாலும், மாநிலக் கட்சிகளின் ஆதிக்கமும் உள்ளது. இதனால் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமா? அல்லது காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையுமா? இதையெல்லாம் தாண்டி 3-வது அணி ஆட்சி அமையும் வாய்ப்பு கிட்டுமா? என்பதற்கான விடை இன்று தெரியப்போகிறது.

You'r reading டெல்லி அரியணையில் அமரப்போவது யார்?-கவுண்ட் டவுன் தொடங்கியது..! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை