ராஜினாமா முடிவில் ராகுல் பிடிவாதம்.. காங்., கட்சியில் மூத்த தலைகளை களையெடுக்கும் திட்டமா..? பரபரக்கும் பின்னணி

Reasons behind the resignation of congress leader Rahul Gandhi: analysis

by Nagaraj, May 30, 2019, 13:56 PM IST

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ராகுல் காந்தி, ஒட்டு மொத்த கட்சியினரும் வேண்டுகோள் விடுத்தும் தனது முடிவில் பின்வாங்காமல் உறுதியாக உள்ளார். இதற்குப் பின்னணியில், காங்கிரசுக்கு புது ரத்தம் பாய்ச்ச ராகுல் காந்தியின் பலே த தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் தோல்வியால் துவண்டு போயுள்ளது நூறாண்டுக்கும் மேல் பாரம்பர்யம் கொண்ட காங்கிரஸ் கட்சி . ராஜீவ் காந்திக்குப் பின்,இளம் தலைவரான ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின் சந்தித்த முதல் பொதுத் தேர்தல் இது. இதில் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் ராகுல் காந்தி. கட்சியின் ஒட்டு மொத்த தலைவர்களும் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்க முடியாது என்று கூறி அவரை சமாதானப்படுத்த பல வழிகளில் முயன்று வருகின்றனர்.

ஆனாலும் தனது ராஜினாமா முடிவை அறிவித்து 5 நாட்கள் கடந்தும் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதாகவே செய்திகள் வெளியாகி வருகிறது . மேலும் கட்சியின் பிற தலைவர்கள் தன்னை சந்திப்பதைக் கூட தவிர்த்து வருகிறாராம். மிகவும் வேண்டப்பட்ட ஒரு சிலர் மட்டுமே கடந்த சில நாளில் ராகுலை சந்திக்க முடிகிறது. அந்த வகையில் அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் இன்று ராகுலை சந்தித்த பின் கூறுகையில், ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவில் உறுதியாகவே உள்ளார். வேறு ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கப் பாருங்கள். அதுவரைக்கும் வேண்டுமானால் தலைவர் பதவியில் நீடிக்கிறேன் என்று மட்டுமே கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

ராகுலின் இந்தப் பிடிவாதத்திற்கு மிக முக்கியமான பின்னணிக் காரணம் இருப்பதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு தலைவரான பின்பு, கட்சிக்கு உயி௹ட்ட தான் கொண்டு வர நினைத்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அவரால் மேற்கொள்ள முடியவில்லையாம். இதற்கெல்லாம் காரணம், கட்சியில் பன்னெடுங்காலமாக கோலோச்சி வரும் மூத்த தலைவர்களின் தடை தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இதற்கு கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த ம.பி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அனுபவங்களை உதாரணமாக கூறுகின்றனர். பாஜக ஆட்சியில் இருந்த இந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க ராகுல் வகுத்த திட்டம் வெற்றிக்கு உதவியது. அதாவது, தன்னை ஒத்த வயதுடைய இளம் தலைவர்களான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை ம.பி.க்கும், சச்சின் பைலட்டை ராஜஸ்தானுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களாக்கினார் ராகுல் .இந்த வியூகம் வெற்றி தேடித் தந்தது. ஆனால் வெற்றிக்கு காரணமான சிந்தியாவையும்,பைலட்டையும் முதல்வராக்க நினைத்த ராகுலின் எண்ணம் ஈடேற வில்லை.தேர்தல் முடிவுக்குப் பின் முதல்வர் நாற்காலிக்கு மூத்த தலைவர்கள் பிடிவாதமாக சண்டை போட்டனர். இதனால் ம.பி.யில் கமல்நாத், ராஜஸ்தானில் அசோக் கெலாட் என மூத்த தலைகள் முதல்வராக, சிந்தியாவும், சச்சின் பைலட்டும் துணை முதல்வராக மட்டுமே முடிந்தது.

அது போன்றுதான் தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் மூத்த தலைவர்களால் பல கசப்பான அனுபவங்களை ராகுல் சந்தித்துள்ளார்.வேட்பாளர் தேர்வில், தனது குடும்பத்து வாரிசுகளையும், ஆதரவாளர்களையும் முன்னிறுத்துவதில் மட்டுமே மூத்த தலைவர்கள் முரண்டு பிடித்து வெற்றி பெற்றனர். இதனால் கட்சியில் வெற்றி வாய்ப்புள்ள புதுமுகங்கள் பலரை களமிறக்க நினைத்த ராகுல் காந்தியின் திட்டம் தவிடு பொடியானது.

இதனைத் தான் கடந்த சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்திலும் பகிரங்க குற்றச் சாட்டாக கூறி வெடித்துள்ளார் ராகுல் .அதுவும் ப.சிதம்பரம், கமல்நாத், அசோக் கெலாட் போன்றோரின் பெயரைக் குறிப்பிட்டே ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களால் இனி ஒருபோதும் ஆதாயம் இல்லை. கட்சியை மீண்டும் உயிரோட்டமாக்க வேண்டுமானால் இளம் தலைவர்களை ஊக்கு விக்க வேண்டும். அதற்கு தடையாக உள்ள மூத்த தலைகள் பலரை களையெடுக்க வேண்டும் என ராகுல் ஒரு திடமான முடிவுக்கே வந்து விட்டாராம். இது தான் கடைசி ஆயுதமாக இந்த ராஜினாமா முடிவை எடுத்துள்ளாராம்.

தற்போதைய நிலையில் ராகுல் காந்தியைத் தவிர்த்து, கட்சியை வழிநடத்திச் செல்ல குறிப்பிட்டுச் சொல்லும்படியாக செல்வாக்குள்ள எந்த தலைவரும் காங்கிரசில் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த சங்கதி தான். அதனாலேயே மூத்த தலைவர்களின் தடையின்றி தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ராஜினாமா ஆயுதத்தை கையில் எடுத்து ஆட்டம் காட்டியுள்ளாராம் ராகுல் . அதனால் தான் சோனியா, பிரியங்கா ஆகியோரின் முழு ஆதரவும் ராகுல் காந்திக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த நெருக்கடியான கட்டத்தில்,வேறு வழியின்றி, மூத்த தலைவர்கள் தாங்களாகவே ராகுல் காந்திக்கு வழி விடுவார்கள். அதன் பின் காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்களை கொண்டு வருவது தான் ராகுல் காந்தியின் இந்த ராஜினாமா முடிவின் பின்னணிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

You'r reading ராஜினாமா முடிவில் ராகுல் பிடிவாதம்.. காங்., கட்சியில் மூத்த தலைகளை களையெடுக்கும் திட்டமா..? பரபரக்கும் பின்னணி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை