காஷ்மீரில் முதல்முறையாக 22 மாவட்டத்திலும் ஊரடங்கு குலாம் நபி குற்றச்சாட்டு

Ghulam Nabi Azad Stopped At Srinagar Airport, May Be Sent Back

by எஸ். எம். கணபதி, Aug 8, 2019, 14:13 PM IST

காஷ்மீரில் முதல்முறையாக 22 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் திரும்பிய அவரை போலீசார், விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர்.


காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்கள் என மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் பெரிய பிரச்னைகள் வந்து விடக் கூடாது என்பதற்காக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவப் படைகள் குவிக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் உள்பட 400 பேர் வரை கைது செய்யப்பட்டனர். செல்போன், இணையதள சேவை உள்பட தகவல் தொடர்பு வசதிகள் அனைத்தும் முடக்கிவைக்கப்பட்டன.


இந்நிலையில், காங்கிரஸ் ராஜ்யசபா குழு தலைவரும், காஷ்மீரைச் சேர்ந்த மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் இன்று காலை டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு விமானத்தில் சென்றார். ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அவர் வந்திறங்கியதும், அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். விமான நிலையத்தில் விருந்தினர் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர், மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று கூறப்படுகிறது.


இதனிடையே, நிருபர்களிடம் குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘‘காஷ்மீர் மக்கள் மிகவும் சோகமாக இருக்கிறார்கள். அவர்களின் சோகத்தைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். ஆனால், என்னை தடுத்து நிறுத்தியுள்ளனர். காஷ்மீரில் ஒட்டுமொத்தமாக 22 மாவட்டங்களிலும் முதல்முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு இப்படி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆனால், காஷ்மீரில் மக்கள் எப்போதும் போல் இருப்பதாக காட்டுவதற்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சிலருடன் மதிய உணவு சாப்பிடும் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இப்படி யார் வேண்டுமானாலும் செட்டப் செய்யலாம்’’ என்றார்.

ஜம்மு காஷ்மீர் மசோதாக்களை அதிமுக ஆதரித்த பின்னணி என்ன?

You'r reading காஷ்மீரில் முதல்முறையாக 22 மாவட்டத்திலும் ஊரடங்கு குலாம் நபி குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை