எதிர்க்கட்சியிலும் நண்பர்கள் மறைந்த ஜெட்லியின் சிறப்பு

Friends of the Opposition The specialty of the late Jaitley

by எஸ். எம். கணபதி, Aug 24, 2019, 14:29 PM IST

66 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணம் அடைந்திருக்கிறார். ‘நட்புக்கு இலக்கணம்’ என்று சொல்வார்களே... அந்த வார்த்தைகளுக்கு மிகவும் பொருத்தமானவர் அருண் ஜெட்லி. அவரைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பை பார்க்கலாம்.

அருண் ஜெட்லி, 1952ம் வருடம், டிசம்பர் 28ம் தேதி டெல்லியில் மகாராஜ் கிஷன் ஜேட்லி, ரத்தன் பிரபா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர். டெல்லி சேவியர் பள்ளியில் படித்து விட்டு, ஸ்ரீராம் கல்லூரியில் பி.காம் பட்டம் படித்தார். அடுத்து, சட்டமும் பயின்றார்.
ஜெட்லி, கல்லூரியில் படிக்கும் போதே ஏ.பி.வி.பி. என்று அழைக்கப்படும் அகில பாரத வித்யா பரிஷத் சங்கத்தில் சேர்ந்தார். அதற்கு பிறகு டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார்.

1975ம் ஆண்டில் இந்திரா காந்தி அரசு, நாட்டில் எமர்ஜென்சியை அறிவித்த போது, போராட்டங்களில் தீவிரமாக இருந்த அருண் ஜெட்லியும் கைது செய்யப்பட்டார். 19 மாதங்கள் சிறையில் இருந்தார் ஜெட்லி.

அதற்கு பிறகு அவர் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினாலும், பொது வாழ்வில் இருந்து ஒதுங்கி விடவில்லை. ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராஜ் நாராயணன் போன்ற சோஷலிச தலைவர்களின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றினார்.

ஆனாலும் வழக்கறிஞர் தொழிலிலும் கவனம் செலுத்திய ஜெட்லி, டெல்லி ஐகோர்ட்டில் சீனியர் வக்கீலாக தேர்வானார். 1989ம் ஆண்டில், வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் அடிசனல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றினார்.

இதற்கு பிறகு பிஜேபி கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் பங்கேற்றார். 1999ம் ஆண்டில் வாஜ்பாய் அரசில் தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சராக பதவியேற்றார். அடுத்த ஓராண்டில் சட்டம் மற்றும் கப்பல் துறை கேபினட் அமைச்சராக உயர்ந்தார்.
வாஜ்பாய் ஆட்சிக்குப் பிறகு, காங்கிரஸ் ஆட்சி வந்த போது, அருண் ஜெட்லி, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார். 2014ம் ஆண்டில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், நிதி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அதற்கு பிறகு ராணுவ அமைச்சராகவும் பணியாற்றினார்.

இந்த முறை மோடி ஆட்சி பொறுப்பேற்ற போது, ஜெட்லி தனக்கு உடல்நிலை சரியில்லாததால் அமைச்சர் பதவி வேண்டாம் என்று கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பி விட்டார். அதற்கு பிறகு சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த அருண் ஜெட்லி, அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெட்லி, ஆகஸ்ட் 24ம் தேதி மரணமடைந்து விட்டார்.

மருத்துவமனையில் இருந்த போது கூட, ஜெட்லி ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார். கடைசியாக, ஆகஸ்ட் 7ம் தேதி சுஷ்மா மரணம் அடைந்தார். அதற்கு இரங்கல் தெரிவித்து ஜெட்லி ஒரு ட்விட் போட்டார். அதில் சுஷ்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று கூறியிருந்தார்.

ஜெட்லியைப் பொறுத்தவரை நண்பர்களை சேர்ப்பதில் வல்லவர். எதிர்க்கட்சிகளிலும் தனக்கென தனிப்பட்ட முறையில் சில நண்பர்களை வைத்திருப்பார். எல்லோரிடமும் நட்புடன் பேசுவதிலும், நண்பர்களை தக்க வைத்து கொள்வதில் அவரை யாரும் மிஞ்ச முடியாது.

ஆனாலும், பி.ஜே.பி. கட்சிக்குள்ளேயே சுப்பிரமணிய சுவாமி, உமா பாரதி, கீர்த்தி ஆசாத் போன்ற சிலர் அவருக்கு எதிரிகள் போல் கடுமையாக விமர்சித்து வந்தார்கள். அவர்களை ஜெட்லி பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. கோபப்படுவதும் இல்லை.
மோடி மீது கோபம் கொண்டு பிஜேபி கூட்டணியை விட்டு வெளியேறிய பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை மீண்டும் கூட்டணிக்கு அழைத்து வந்ததே ஜெட்லிதான்.

பிரதமர் மோடி, 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியனறு ராத்திரியில் ஒரு அறிவிப்பு வெளியிட்டாரே, ஞாபகமிருக்கா? 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது என்று. அப்போது நிதியமைச்சராக இருந்தவர் ஜெட்லிதான். அதே போல், ஜி.எஸ்.டி. கொண்டு வந்த போதும் நிதியமைச்சர் ஜெட்லிதான்.

இதெல்லாமே ஜெட்லின் வரலாற்றில் இடம் பெறும் என்பது சந்தேகமில்லை.

எமர்ஜென்சியின் போது 19 மாதம் சிறைவாசம் அனுபவித்த அருண் ஜெட்லி

You'r reading எதிர்க்கட்சியிலும் நண்பர்கள் மறைந்த ஜெட்லியின் சிறப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை