காஷ்மீர் உரிமைகள் மறுப்புக்கு பதிலடிதான் என் ராஜினாமா இளம் ஐ.ஏ.எஸ். கோபிநாதன் பேட்டி

Want my freedom of expression back, says 2012-batch IAS officer who quit service

by எஸ். எம். கணபதி, Aug 26, 2019, 11:34 AM IST

காஷ்மீர் மக்களின் பேச்சுரிமை பறிக்கப்பட்டதற்கு எனது பதிலாகவே ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன் என்று பதவி விலகிய கண்ணன் கோபிநாதன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன்களாக பிரிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபடலாம், அதனால் வன்முறைகள் ஏற்படக் கூடும் என்று கருதி, கடந்த 5ம் தேதி முதல் காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட முக்கிய தலைவர்கள் கடந்த 20 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டு, காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவும் நீடித்து வருகிறது. சில இடங்களில் மட்டுமே பள்ளி, கல்லூரிகள் இயங்குகின்றன.

இந்நிலையில், தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசத்தில் பணியாற்றி வந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் கடந்த 21ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கோபிநாதன், பொது தொண்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடந்த 2012ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் 59வது இடம் பெற்று பணியில் நுழைந்தவர்.

இவரது ராஜினமாவை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை. ஆனால், அதற்கு முன்பாக அவரது நண்பர்கள் மூலம் சமூக ஊடங்களில் பரவி விட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக அவர் பத்திரிகைகளுக்கு பரபரப்பு பேட்டி அளித்து வருகிறார். அதில் காஷ்மீர் நிலவரம் குறித்து அரசுக்கு எதிரான கடுமையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

அவரது பேட்டிகளில் இருந்து சில பகுதிகள் வருமாறு:

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மக்களின் குரல்களை புரிந்து கொண்டு அதை அரசாங்கத்திடம் எதிரொலிக்க வேண்டியவர்கள். அப்படி செய்வதன் மூலம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியவர்கள். ஆனால், இப்ேபாது என்னால் எனது குரலையே ஒலிக்க முடியவில்லை. எங்களுக்கே பேச்சு சுதந்திரம் இல்லை. ஒரு நாள் வாழ்ந்தாலும் நான், நானாக வாழ விரும்புகிறேன். எனது கருத்துக்களை முழுமையாக வெளிப்படுத்த விரும்புகிறேன்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு மாநிலம் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டு, மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு பதில் கொடுக்கும் விதமாகவே நான் ராஜினாமா செய்திருக்கிறேன். அது ஏற்கப்படும் வரை பேசாமல் இருக்க விரும்பினேன். ஆனால், நண்பர்கள் மூலம் வெளிவந்து விட்டது.
நான் ஒரு பத்திரிகை நடத்தினால், இன்று(ஆக.23) முதல் பக்கத்தில் பெரிதாக ‘19’ என்று மட்டுமே அச்சடித்திருப்பேன். அதாவது, காஷ்மீரில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட 19வது நாள் என்பதை பிரதிபலித்து காட்டியிருப்பேன்.

நான் சிவில் சர்வீஸ் தேர்வில் பாஸ் செய்த போது, அடித்தட்டு மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று நினைத்தேன். ஆனால், அரசாங்கத்தின் சிஸ்டத்துக்குள் நாம் நினைப்பது எதையுமே செய்ய முடியாது.

நான் கேரளாவில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன். ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதையே காட்டாமல் பணியாற்றினேன். அந்த சமயத்தில், நான் தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசத்தில் பணியாற்றி வந்தேன். அப்போது, எனக்கு பல மெமோக்கள் கொடுத்தார்கள். பிரதமரின் விருதுக்கு ஏன் விண்ணப்பிக்கவில்லை என்று கேட்டார்கள். அதனால், அதற்கு விண்ணப்பித்தேன். எப்போது கேரளாவுக்கு போனீர்கள்? என்னென்ன பணிகள் செய்தீர்கள் என்று எல்லாம் விசாரணை நடத்தினார்கள். பல மெமோக்களில் எந்தவித முகாந்திரமும் கிடையாது.

சமீபத்தில் ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பெய்சல் வெளிநாட்டுக்கு செல்வதற்காக டெல்லி வந்த போது, அவரை தடுத்தி நிறுத்தி ஸ்ரீநகருக்கு திருப்பி அனுப்பினர். ஆனால், யாருமே இது பற்றி கேள்வி எழுப்பவில்லை. எல்லாவற்றையும் சமூகம் அமைதியாக பார்த்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் என்னை வருந்தச் செய்தது. அதனால்தான், ராஜினாமா செய்தேன்.

இப்படி பலவாறாக குமுறியிருக்கிறார் கண்ணன் கோபிநாதன்.
இவர், பிர்லா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரானிக் இன்ஜினீிரியங் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். அதன்பின், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர். சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கோபிநாதனின் ஆதங்கத்தில் பல ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதை எல்லோரும் உணர முடியும்.
காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதை வெறும் அரசியலாக மத்திய பாஜக அரசு பார்க்கலாம்.

ஆனால், நன்கு படித்து தேர்ச்சி பெற்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஷா பெய்சல், கண்ணன்கோபிநாதன் ஆகியோர் அடுத்தடுத்து ராஜினமா செய்து எழுப்பிய குரலையும் அப்படி வெறும் அரசியலாக மத்திய அரசு புறந்தள்ளி விட முடியுமா?

காஷ்மீருக்குள் செல்ல அனுமதி இல்லை; ராகுல்காந்தி தலைமையிலான குழு தடுத்து நிறுத்தம்

You'r reading காஷ்மீர் உரிமைகள் மறுப்புக்கு பதிலடிதான் என் ராஜினாமா இளம் ஐ.ஏ.எஸ். கோபிநாதன் பேட்டி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை