ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துடன் சிக்கும் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி

CBI confronts P Chidambaram with former NITI Aayog CEO Sindhushree Khullar

by எஸ். எம். கணபதி, Aug 27, 2019, 11:38 AM IST

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ஓய்வு பெற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிந்துஸ்ரீ குல்லார் சிக்குகிறார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு மொரிசீயஸ் நாட்டு கம்பெனிகளிடம் இருந்து ரூ.305 கோடி முதலீடு வந்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரூ.305 கோடி முதலீடு பெற்றதை அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை முறைகேடாக பெற்றுத் தந்தது சிதம்பரம் என்றும், இதற்காக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தும் கம்பெனிகளுக்கு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் லஞ்சப் பணத்தை அனுப்பியுள்ளது என்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், சி.பி.ஐ. காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். ஏற்கனவே 5 நாட்கள் சி.பி.ஐ. காவல் முடிந்த நிலையில், வரும் 30ம் தேதி வரை காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்நிலையில், ஓய்வு பெற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிந்துஸ்ரீ குல்லார் நேற்று சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். 1975ம் ஆண்டு யூனியன் பிரதேச ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ். பணிக்கு வந்த குல்லார், ஐ.என்.எக்ஸ் மீடியா முதலீடுக்கு முறைகேடாக அனுமதி தரப்பட்ட சமயத்தில் நிதியமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக இருந்துள்ளார். அதனால், அவரும் சிதம்பரத்தின் ஊழலுக்கு உடந்தை என்று சி.பி.ஐ. குற்றம்சாட்டுகிறது. அவரை இந்த ஊழல் வழக்கில் சேர்ப்பதற்காக மத்திய அரசின் அனுமதியை சி.பி.ஐ. கோரியுள்ளது.

சிந்துஸ்ரீ குல்லாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, சிதம்பரமும் அருகில் இருந்ததாகவும், இருவரிடமும் சேர்த்து விசாரணை நடத்தப்பட்டது என்றும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிதம்பரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டியிருந்ததால், பாதியில் விசாரணை நிறுத்தப்பட்டது என்றும் மீண்டும் ஒரு குல்லாரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவரை கைது செய்வது பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதா விவகாரங்கள் துறையில் சிறப்பு செயலாளராகவும் பணியாற்றிய சிந்துஸ்ரீ குல்லார், கடந்த 2015ம் ஆண்டில் நிதிஆயோக்கின் முதல் தலைமை செயல் அலுவலராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு ; உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

You'r reading ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துடன் சிக்கும் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை