அமலாக்கத்துறையின் அடுத்த குறி கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் அவசர, அவசரமாக சம்மன்

ED targets Karnataka senior Congress leader DK Siva Kumar, sends summon

by Nagaraj, Aug 30, 2019, 13:51 PM IST

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து, கர்நாடக காங்கிரசின் முக்கியப் புள்ளியும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரை குறிவைத்துள்ளது அமலாக்கத்துறை .நேற்று நள்ளிரவில் சம்மன் அனுப்பி, இன்று பிற்பகலுக்குள் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் 2-வது முறையாக அமைந்துள்ள பாஜக அரசில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா உள்துறை அமைச்சரானார். அமித் ஷா அமைச்சரான பிறகு காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் பலரும் சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினரால் குறி வைக்கப்பட்டு வேட்டையாடப்படுகின்றனர். ம.பி. முதல்வர் கமல்நாத்தின் மருமகன் மோசடி வழக்கில் சிக்க வைக்கப்பட்டார்.

தொடர்ந்து ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், விசாரணை துரிதப்படுத்தப்பட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையும் அவரை கைது செய்து விசாரிக்க துடித்துக் கொண்டிருக்கிறது. சிபிஐ, அமலாக்கப் பிரிவின் நெருக்கடியில் சிக்கி, ஜாமீனில் வெளிவர முடியாமல் சிதம்பரம் தவிப்பு, உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சட்டப் போராட்டமே நடந்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரசின் டிரபுள் சூட்டர் என்று அழைக்கப்படும் டி.கே.சிவக்குமாரும், இப்போது அமலாக்கத்துறையின் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.கடந்த 2017-ல் குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலின் போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அகமது படேலை தோற்கடிக்க, காங்கிரஸ் எம்எல்ஏக்களை வளைக்க பாஜக சூழ்ச்சி செய்ய முயன்றது. இதனால் குஜராத் எம்எல்ஏக்களை பத்திரப்படுத்தும் பொறுப்பை டி.கே.சிவக்குமாரிடம் ஒப்படைத்தது. டி.கே.சிவக்குமாரும், காங்.எம்எல்ஏக்களை கனகச்சிதமாக பெங்களூருவில் பத்திரப்படுத்தினார்.

இதையடுத்து வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் டி.கே.சிவக்குமாரை ரெய்டு விட்டன. ஏராளமான சொத்துக்கள் முடக்கப்பட்டு, பல கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஹவாலா மோசடி, சட்ட விரோத பண பரிமாற்றம் என வழக்குகளும் பாய்ந்தன.

இந்நிலையில் கடந்தாண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி அரசு அமைய முக்கிய காரணகர்த்தாவாக திகழ்ந்தவரும் டி.கே.சிவக்குமார் தான். அரசில் முக்கிய அமைச்சராகி விட்ட சிவக்குமார், அமலாக்கத்துறையின் பிடியில் இருந்து நழுவி வந்தார். அமலாக்கத்துறையின் சம்மன்களுக்கு ஆஜராகாமல் இருக்க பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தடையும் பெற்றிருந்தார்.

சமீபத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பில் பாஜக தீவிரம் காட்ட, அதை முறியடிக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்ட வரும் சிவக்குமார் தான். ஆனால் அவருடைய முயற்சிகள் பலிக்காமல், பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது. ஆனாலும் டி.கே.சிவக்குமாரை பழி தீர்க்க, அவர் மீது மத்திய அரசு கண் வைத்து வந்தது.

இந்நிலையில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில், சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப விதிக்கப்பட்ட தடை நேற்று நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டி.கே.சிவக்குமாருக்கு நேற்று இரவே அமலாக்கத்துறை சம்மனை அனுப்பி விட்டது. நேற்றிரவு 9.40 மணிக்கு வழங்கப்பட்ட சம்மனில், டெல்லியில் அமலாக்கத்துறை முன் இன்று பிற்பகல் 1 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

அமலாக்கத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கை டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று அவர் வீட்டில் குவிந்த ஆதரவாளர்களை சமாதானப்படுத்திய சிவக்குமார் பேசுகையில், நான் ஒன்றும் யாருடைய பணத்தையும் அபகரிக்கவில்லை. கற்பழிப்பு போன்ற மாபாதக செயல்கள் எதுவும் செய்து விடவில்லை. அரசியல் ரீதியாக பழி வாங்குகிறது பாஜக . இதனை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று கூறினார்.

மேலும் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், இது ஒரு சாதாரண வருமாவரித்துறை பிரச்னை. இதில் பண மோசடி தடுப்பு சட்டத்திற்கு இடமே இல்லை. பகல் 1 மணிக்கு டெல்லிக்கு வந்து விசாரணைக்கு ஆஜராகும்படி நேற்று இரவு சம்மன் அனுப்பி உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக எனது 83 வயது தாயின் அனைத்து சொத்துக்களும் பல்வேறு அமைப்புக்களின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விட்டன. சொத்துக்களை பினாமி சொத்துக்கள் என்றதுடன், என்னையும் பினாமி ஆக்கி விட்டனர். எங்களின் ஒட்டுமொத்த ரத்தத்தையும் உறிஞ்சி எடுத்து விட்டனர். நான் சட்ட விரோத நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை.

என்னை துன்புறுத்த பார்க்கிறார்கள். என்னை கஷ்டப்படுத்துவதால் ஏற்படும் சந்தோஷத்தை அவர்கள் அனுபவித்து விட்டு போகட்டும். ஆனாலும் நான் சட்டத்தை மதிப்பவன். அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்வேன். உச்ச நீதிமன்றத்தில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பேன் என்று சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

ஏதேனும் ஒரு ஆதாரத்தை காட்ட முடியுமா? - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் குடும்பம் சவால்

You'r reading அமலாக்கத்துறையின் அடுத்த குறி கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் அவசர, அவசரமாக சம்மன் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை