பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை.. தமிழக அரசு அறிவிப்பு..

by எஸ். எம். கணபதி, Nov 5, 2020, 14:32 PM IST

பாஜக நாளை முதல் நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு. ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எப்படியாவது கட்சியை வளர்த்து விட வேண்டுமென்ற நோக்கில், இந்து மதப் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு பல உத்திகளை பாஜக பின்பற்றி வருகிறது. இதில் ஒன்றாக, நாளை(நவ.6) முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை என்ற பெயரில் யாத்திரை நடத்தவிருப்பதாகத் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். இந்த யாத்திரையில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்றும், திருத்தணியில் தொடங்கும் வேல் யாத்திரை, டிசம்பர் 6ல் திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முஸ்லிம்கள் கடைப்பிடிக்கின்றனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட ஆண்டிலிருந்து டிச.6ம் தேதி என்பது நாடு முழுவதும் பதற்றமான நாளாகவே இருந்து வருகிறது. அந்த நாளில் ரதயாத்திரையை முடிக்க வேண்டுமென்று பாஜக திட்டமிட்டிருப்பதில் ஏதோ உள்நோக்கம் உள்ளதாகவும், வேல் யாத்திரை பெயரில் மதக் கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில், வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கக் கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வேல் யாத்திரை நிறைவடைய இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்றும் மனுவில் கூறப்பட்டது.இம்மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், தற்போது கொரோனா 2வது அலை வீசலாம் என்றும், மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதனால், ஊர்வலங்கள், பேரணிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாஜகவின் வேல் யாத்திரைக்கும் அனுமதி தர முடியாது என்று தெரிவித்தார்.அதற்கு பாஜக வழக்கறிஞர், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ளனர். பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. எனவே, வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கக் கூடாது என்று வாதாடினார்.

You'r reading பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை.. தமிழக அரசு அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை