தேர்தல் நெருங்க, நெருங்க மம்தா மட்டுமே இருப்பார். மேற்குவங்கத்தில் அமித் ஷா ஆவேசம்!

by Sasitharan, Dec 19, 2020, 19:32 PM IST

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி உள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் அடிக்கடி மேற்கு வங்கத்திற்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். மேலும், ஆளும் திரிணாமுல் கட்சியில் உள்ள அதிருப்தி தலைவர்களை பாஜகவில் சேர்த்து வருகின்றனர். இதற்கிடையே, இரு கட்சியினருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கொல்கத்தாவுக்குச் சென்ற போது அவர் கார் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து, அம்மாநிலத் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மத்திய உள்துறை சம்மன் அனுப்பியது. 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணிமாற்றம் செய்தது. இந்த உத்தரவுகளை மம்தா பானர்ஜி அரசு ஏற்கவில்லை.

இந்த சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று(டிச.19) காலை மேற்கு வங்கத்திற்குச் சென்றார். மிட்னாப்பூரில் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா முன்னிலையில், கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் 3 பேர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 6 பேர், ஒரு எம்பி, பாஜகவில் இணைந்தனர். கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ``பாஜகவுக்கு 5 ஆண்டுகள் கொடுங்கள். நாங்கள் வங்காளத்தை சோனார் பங்களாவாக மாற்றி காட்டுகிறோம்.

மேற்குவங்கத்தின் அனைத்து பிரச்சினைகளையும் மோடி ஜி தலைமையில் பாஜக அரசு தீர்க்கும். வருகிற தேர்தலில் பாஜக 200 க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும். மம்தாவின் ஆட்சியை திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகளும் வெறுத்து போயுள்ளனர். இதனால் தான் கட்சி மாறுகிறார்கள். தேர்தலின்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா மட்டுமே இருப்பார்" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

You'r reading தேர்தல் நெருங்க, நெருங்க மம்தா மட்டுமே இருப்பார். மேற்குவங்கத்தில் அமித் ஷா ஆவேசம்! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை