இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரன் தற்போது சிலோன் பெவரஜேஸ் என்ற பெயரில் குளிர்பானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
சுமார், ரூ. 1600 கோடி செலவில் ஜம்மு காஷ்மீரில் புதிய தொழிற்சாலை ஒன்றை தொடங்க அவர் திட்டமிட்டிருந்தார். இதற்காக, காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் முற்றிலும் இலவசமாக 25.25 ஏக்கர் நிலத்தை அந்த மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இந்த விவகாரம் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் எதிரொலித்தது. பட்ஜெட் தாக்கலின் போது, கேள்வி நேரத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா இலங்கை கிரிக்கெட் வீரருக்கு எப்படி இலவசமான நிலம் ஒதுக்கலாம்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
மார்ச்சிக்ஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ தாரிணி, 'இந்த விஷயம் ரொம்பவே சீரியசானது. இந்தியர் அல்லாத ஒருவருக்கு எப்படி முற்றிலும் இலவசமாக நிலம் வழங்கலாம். இந்தியர் அல்லாத ஒருவர் சல்லி பைசா கூட கொடுக்காமல் ஜம்மு காஷ்மீரில் நிலம் பெற முடிகிறது என்றால், இதை என்னவென்று சொல்வது? என்று கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த ஜம்மு காஷ்மீர் விவசாய உற்பத்தித் துறை அமைச்சர் ஜாவேத் அமகது தார், 'இது தொடர்பான தகவல்கள் எங்களுக்கு வரவில்லை. வருவாய்துறைதான் இந்த விவகாரத்தை கவனித்து வருகிறது. இந்த விஷயத்தில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்துவோம் 'என்று பதிலளித்தார்.