கங்கைகொண்டானில் போதை சாக்லேட், மதுபாட்டில்கள் பறிமுதல்: மூவர் கைது!

drug-laced-chocolates-and-liquor-bottles-seized-in-gangaikondaan-three-arrested

கங்கைகொண்டான் பகுதியில் போதை சாக்லேட் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூவரை கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக உதவி ஆய்வாளர் அபினேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அபினேஷ் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கே.எல்.ஆர் மாவு மில் அருகே சந்தேகத்துக்கிடைமான வகையில் நின்று கொண்டிருந்த ஆலங்குளம், அருணாச்சலபுரம், தெற்குத் தெருவைச் சேர்ந்த முருகேசன் (28), ராஜாஜி (25), மற்றும் ரமேஷ் (24) ஆகிய மூவரையும் காவல்துறையினர் சோதனை செய்தனர்.

சோதனையின் போது, அவர்களிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் எடை கொண்ட போதை சாக்லேட்கள் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 6 மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாக, அவர்கள் மூவரையும் கங்கைகொண்டான் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தாழையூத்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் போதை பழக்கத்தை முற்றிலுமாக குறைக்கும் நோக்கத்துடன், மாவட்ட காவல்துறையினர் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், அவற்றை வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கடுமையாக எச்சரித்துள்ளார்.