40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இந்திய கப்பல்... இன்று வரை தடயமே தெரியாத சோகம்

The-Indian-ship-that-disappeared-40-years-ago

கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து கடந்த மே 23ம் தேதி புறப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று 24 பேர் கொண்ட குழுவுடன் கொச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது, கடலில் கவிழ்ந்தது. அடுத்த நாள் கொச்சிக்கு சென்றடைவதற்கு முன், இந்த கப்பல் கடலில் கவிழ்ந்து கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன. இந்த சம்பவத்தையடுத்து, கடந்த 1979ம் ஆண்டு இந்திய கப்பல் ஒன்று காணாமல் போன சம்பவம் பற்றிய செய்தியும் வெளியாகியுள்ளது. அந்த கப்பல் பற்றி இன்று வரை, அந்த கப்பல் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்பதுதான் முற்றிலும் சோகம்.

கேரள ஷிப்பிங் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான எம்.வி. கைரளி என்ற சரக்குக் கப்பல் கடந்த 1979 ஆண்டு ஜூலை 3ம் தேதி 20 ஆயிரம் டன் இரும்பு பொருட்களுடன் கோவாவில் ஜெர்மனிக்கு புறப்பட்டது. கப்பலில் 49 பணியாளர்கள் இருந்தனர். கப்பலின் கேப்டன் பெயர் மரியதாஸ் ஜோசப். இவர், கோட்டயத்தை சேர்ந்தவர். திபவுத்தி வழியாக ஜெர்மனியின் ரஸ்டோக் நகரை அடைவது பயண திட்டமாக இருந்தது. ஜூலை 8ம் தேதி இந்த கப்பல் திபவுத்தி துறைமுகத்தை சென்றைடைந்திருக்க வேண்டும். ஆனால், கப்பல் சென்றடையவில்லை. கப்பலில் இருந்து தகவல் தொடர்பு ஜூலை 3ம் தேதி இரவு 8 மணியுடன் நின்று விட்டது.

திபவுத்தியில் இருந்து ஜூலை 11ம் தேதி கேரள ஷிப்பிங் கார்பரேஷனுக்கு கப்பல் காணாமல் போனது குறித்து தகவல் அளித்துள்ளனர் . கேரள ஷிப்பிங் கார்ப்பரேஷன் கப்பலை கண்டுபிடிக்க ஆண்டு கணக்கில் முயற்சி எடுத்தது. ஆனால், எந்த தடயமுமே கிடைக்கவில்லை. கப்பலின் கேப்டன் பணியாளர்கள் உள்ளிட்ட எந்த தகவலும் இன்று வரை கிடைக்கவில்லை. கப்பல் கேப்டன் மரியதாஸின் மனைவி மரியகுட்டி கடந்த 2010ம் ஆண்டு தனது கணவர் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இறந்து போனார் என்பதும் குறிப்பிடத்தக்கது . மற்ற பணியாளர்களின் குடும்பத்தினரும் இன்று வரை தவித்து கொண்டுதான் உள்ளனர்.