உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
தமிழ் புலவர் திருவள்ளுவருக்கு தென்னிந்திய மாநிலங்களில், வெளிநாடுகளில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தமிழ் கல்வி பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை உள்ளது. ஆனால் , முதன்முறையாக வட இந்தியாவில் பொது இடத்தில் இப்போதுதான் அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜில் மகாகும்பமேளா சமயத்தில் ரயில் நிலையம் ஜங்ஷன் அருகே திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணி தொடங்கியது. இதன் திறப்பு விழா ஜூன் 1ம் தேதி நடந்தது. பிரயாக்ராஜ் வாராணாசி டிவிஷனர் கமிஷனர் ராஜலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய இவர், 1330 குறள்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு குறளில் கூட தமிழ் என்கிற வார்த்தை பயன்படுத்தவில்லை என்பதுதான் குறளின் தனி சிறப்பு என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரயாக்ராஜ் டி.ஐ.ஜி கொளஞ்சி கூறுகையில், 'திருவள்ளுவர் உலகம் போற்ற வேண்டிய புலவர். தேசிய அளவில் அவரை பற்றிய பாடங்கள் புத்தகங்களில் இடம் பெற வேண்டும். தேசிய பறவை, விலங்கு போல திருக்குறல் தேசிய புத்தகமாக அறிவிக்கப்பட வேண்டும். தெய்வத்தால் ஆகாதெனினும் என்ற குறல் வழியாக தெய்வத்தால் செய்ய முடியாதனெனும் ஒருவனுடைய கடும் முயற்சி அவனை வெற்றியடைய வைக்கும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். எனவே, தினமும் ஒரு திருக்குறளையாவது மக்கள் படிக்க வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்திரிகையாளர் சபிமுன்னா, 'திருக்குறள் அனைத்து மத மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் திருக்குறளை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதே போன்ற சூழல்தான் உத்தரபிரதேசத்திலும் காணப்படுகிறது 'என்கிறார்.
இந்த நிலையை மகாகும்பமேளாவின் போதே பிரதமர் மோடி கையால் திறக்க ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது.ஆனால், குவிந்த பெருங்கூட்டம் காரணமாக அது நடைபெறவில்லை.














