
குஜராத் மாநிலம் அமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 265 பேர் இறந்தனர். இந்த விமான விபத்து தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், மனதை உருக வைக்கும் சம்பவம் பற்றிய செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்திலுள்ள வைத்யா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூன் மனுபாய் பட்டோலியா (36). இவரது , மனைவி பெயர் பாரதி பென்.இந்த தம்பதி லண்டனில் வாழ்ந்தனர். இவர்களுக்கு 4 மற்றும் 8 வயதில் இரு மகள்களும் உண்டு.
நோய் வாய்ப்பட்ட நிலையில், இருந்த பாரதி பென் கடந்த வாரம் லண்டனில் இறந்தார். இறப்பதற்கு முன், கணவரிடத்தில் தனது அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க வேண்டுமென உருக்கமாக கூறியிருந்தார். இதையடுத்து, குழந்தைகளை லண்டனில் உறவினர்களின் பராமரிப்பில் விட்டு விட்டு, மனைவியின் அஸ்தியை எடுத்து கொண்டு அர்ஜூன் குஜராத் வந்தார்.
அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைத்து மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றினார். தொடர்ந்து, லண்டனுக்கு நேற்று விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்டு சென்றார். தற்போது, அர்ஜூன் உயிரோடு இல்லை. குழந்தைகள் அனாதாரவாக நிற்கின்றன.