விஷால்,ஜெ.தீபா சொத்து விவரம் எவ்வளவு ?

by Dibrias, Dec 5, 2017, 10:34 AM IST

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள ஜெ.தீபா தனது கையிருப்பாக வெறும் ரூ.25 ஆயிரம் ரூபாய்  மட்டுமே  உள்ளது என பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேச்சைகள் வெற்றிப்பெறும் நோக்கில் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்துள்ள அதிமுக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொது செயலாளர் ஜெ.தீபா, நடிகர் விஷால் ஆகியோரின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.


இதில், தனது கையிருப்பாக 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே வைத்துள்ளதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார். மேலும், கடந்த நிதியாண்டில் 4 லட்சத்து 69 ஆயிரத்து 634 ரூபாய் வருமானவரி தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதைதவிர, 36 லட்சத்து 57 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் தியாகராய நகர் சிவஞானம் சாலையில் 2 கிரவுண்ட் நிலத்தில் 2 ஆயிரத்து 600 சதுர அடியில் வீடு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஆந்திரா வங்கியில் 30 லட்சத்து 65 ஆயிரத்து 500 ரூபாய் கடன் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் ஜெ.தீபா கூறியுள்ளார்.


இதேபோல், நடிகர் விஷால் தனக்கு ஏழரை கோடி ரூபாய் கடன் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அசையா சொத்துகள் எதுவும் இல்லை எனவும் தனது கையில் ரொக்கமாக 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளதாகவும் வங்கிகளிலோ அல்லது பிற நிதி நிறுவனங்களிலோ எந்த முதலீடும் இல்லை என்றும் விஷால் தெரிவித்துள்ளார். இதைதவிர, 1 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பில் பிஎம்டபுள்யூ, ஜாக்குவார் உள்ளிட்ட 4 சொகுசு கார்கள் இருப்பதாகவும், கடந்த நிதி ஆண்டில் 4 கோடியே 21 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்ததாகவும் விஷால் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசுக்கு செலுத்த வேண்டிய மாநகராட்சி வரி, விற்பனை வரி உள்பட பல்வேறு வரி இனங்களில் 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

You'r reading விஷால்,ஜெ.தீபா சொத்து விவரம் எவ்வளவு ? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை