கடவுளின் தேசம் எனக் கருதப்படும் கேரள மாநிலம் வெள்ள பாதிப்பில் இருந்து விரைவில் மீளும் என அம்மாநில முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேரள மாநிலம் தத்தளித்து வருகிறது. ஏறத்தாழ 100 ஆண்டுகளில் பெய்யாத மழை இப்போது பெய்து சுமார் 19 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இதுவரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது.
நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. அந்த பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்கள் உதவிகரம் நீட்டி வருகிறது. போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், வெள்ள பாதிப்புகளில் இருந்து கேரளா மாநிலம் விரைவில் மீண்டு வரும் என நம்புகிறேன். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன."
"கேரளாவில் பெய்துள்ள கனமழை மற்றும் வெள்ளத்தால் 5 லட்சம் பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 22,034 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்."
"வெள்ளம் வடிந்த பகுதிகளில் மின் விநியோகம் அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். வெள்ளம் வடிந்தால் தான் முழுமையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியும்" என தெரிவித்துள்ளார்