உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பயணிகள் உயிரிழந்தனர்.
ரேபரேலி மாவட்டம் ஹர்சந்தபூர் ரயில் நிலையத்தில் இருந்து நியூ ஃபராக்கா விரைவு ரயில் புறப்பட்டது. 50 மீட்டர் தொலைவில் சென்ற நிலையில், ரயிலின் 6 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் தடம் புரண்டது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
சத்தத்தை கேட்ட பொதுமக்கள், ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் திரண்டனர். இது குறித்து ரயில்வே நிர்வாகம் மற்றும் பேரிடர் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
லக்னோ மற்றும் வாரணாசியில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் குழு, ரயில் பெட்டிக்குள் சிக்கி இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.