ஐப்பசி மாத பூஜை நிறைவு பெற்றதை தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்றிரவு அடைக்கப்படுகிறது.
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல தடையில்லை என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பந்தள அரண்மனையினர், இந்து அமைப்புகள், ஐயப்பா சேவா சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளில் ஈடுபட்டனர்.
பரபரப்பான மிகவும் பதற்றமான சூழலில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 17ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சபரிமலைக்கு வந்த 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுவரை 8 பெண்கள் சபரிமலைக்கு வந்ததாகவும், யாரும் கடைசி வரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இன்றைய தினம், மாறுவேடத்தில் பெண்கள் யாரும் உள்ளே வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். 10 முதல் 50 வயதுகுட்பட்ட பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்பதில் ஐயப்ப பக்தர்கள் உறுதியாக உள்ளனர். இன்று இரவு 10 மணிக்கு மூடப்படும் சபரிமலை நடை, அடுத்த மாதம் மண்டல பூஜைக்காக திறக்கப்பட உள்ளது. இதனிடையே, சபரிமலை வந்த பந்தள ராஜா குடும்பத்தினர், பரிகாரம் மற்றும் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்.