5ஜி ஸ்மார்ட் போன் இந்தியாவுக்கு எப்போது வரும்?

When will the 5G smart phone come to India?

by SAM ASIR, Nov 9, 2018, 20:25 PM IST

அமெரிக்காவில் ஐந்தாம் தலைமுறை (5ஜி) சேவை, வணிகரீதியாக ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. அடுத்த ஆண்டான 2019 தொடக்கத்தில் வெகுஜன பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. தென் கொரியா, ஜப்பான், சீனா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் வணிகரீதியான 5ஜி சேவை 2019ம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது.


இந்தியாவை பொறுத்தமட்டில் 5ஜி அடுத்த ஆண்டு ஆய்வுரீதியில் முயற்சிக்கப்பட்டு, 2019ம் ஆண்டின் பிற்பாதியில் அலைக்கற்றை ஏலம் இருக்க வாய்ப்பு உள்ளது. வணிகரீதியாக 2020ம் ஆண்டில் இந்தியாவில் 5ஜி சேவைகள் தொடங்கப்படக்கூடும். இந்தியாவில் இது 70 லட்சம் கோடி ரூபாய்க்கு (1 டிரில்லியன் டாலர்) மேலான வணிக மதிப்பு கொண்டதாகும்.
4ஜி சேவை தரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2019-20 என்ற காலகட்டத்தில் இந்தியாவில் 5ஜி சேவைக்கான சாதனங்கள் தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் கிடைக்கக்கூடிய சேவையானது 2021 முதல் ஆரம்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கிறது.


"சர்வதேச சந்தையில் வரும் எல்லா சாதனங்களுமே 4ஜியைபோல 5ஜி வசதியையும் கொண்டிருக்கும். ஆகவே, 2019ம் ஆண்டு முதல் இந்தியாவில் பொருத்திக் கொள்வதுபோல் (semi-knocked down units) வரும் ஸ்மார்ட் போன்கள் 5ஜி வசதி கொண்டவையாகவே இருக்கக்கூடும். ஆனால் பெருவாரியான மக்கள் பயன்பாட்டுக்கான போன்களே இந்திய சந்தையில் 80 விழுக்காட்டு தேவையாகும். அத்தகைய போன் ஏறக்குறைய 14,000 ரூபாய் (200 டாலர்) விலை கொண்டதாகவே இருக்க வேண்டும். அந்த வகை போன்கள் 2019 அல்லது 2020 முதல் சந்தையில் கிடைக்கக்கூடும்," என்று சர்வதேச தரவு கழகத்தின் (International Data Corporation) ஆராய்ச்சித்துறை இணை இயக்குநர் நவ்கேந்தர் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் 2018ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவில் விற்பனையான மொபைல் போன்களில் 94 விழுக்காடு, இங்கேயே தயாரிக்கப்பட்டவையாகும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்தக் காலாண்டில் ஒட்டுமொத்த மொபைல் போன் விற்பனை 9 விழுக்காடு அதிகமாகியுள்ளது. அதேசமயம் ஸ்மார்ட் போன் வகையில் பார்த்தால் 29 விழுக்காடு உயர்வை எட்டியுள்ளது. உதிரிபாகங்களாக இங்கு வந்து முற்றிலும் இங்கே பொருத்தப்படும் (Completely knocked down) போன்கள் சந்தையில் பாதி இடத்தை பிடித்துள்ளன.


ஆப்போ (OPPO), விவா (Vivo), ஸோமி (Xiaomi) போன்ற ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள், சர்ஃபேஸ் மவுண்ட் (SMT) என்னும் தொழில்நுட்பத்திற்கு பெரும்பாலும் மாறியுள்ளன. இந்த மூன்றாவது காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவும் இப்புதிய தொழில்நுட்பத்திற்குள் நுழைந்துள்ளது. இந்திய நிறுவனங்களை பொறுத்தமட்டில் லாவா (Lava) நிறுவனமே சர்ஃபேஸ் மவுண்ட் தொழில்நுட்பத்தில் அதிகமான போன்களை தயாரிக்கிறது.


அமெரிக்க ஐக்கிய நாடுகள், அநேக ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே புதிய 5ஜி தொழில்நுட்பத்திற்கு தயாராகி விட்ட நிலையில் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் 2019ம் ஆண்டில் ஆரம்பிக்க இருக்கின்றன. பெரிய சந்தையான இந்தியா, சர்வதேச சந்தைக்கு ஏற்ப அலைக்கற்றை ஏலம் மற்றும் 5ஜி வசதி கொண்ட சாதனங்கள் உற்பத்தியில் வேகம் காட்ட வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

You'r reading 5ஜி ஸ்மார்ட் போன் இந்தியாவுக்கு எப்போது வரும்? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை