கன்னியாகுமரியில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சுற்றுப்புறங்களில் ஏராளமான குப்பை கூளங்கள் குவிந்து கிடந்தது . இது குறித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பரவியது .
இந்த தகவல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் அழகுமீனா கவனத்துக்கு சென்றது. உடனடியாக, நடவடிக்கையில் இறங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் 10 - க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்களை கோவில் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். இதையடு்தது, குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. குப்பைகளை தரம் பிரித்து அவ்வப்போது பேரூராட்சி வசம் ஒப்படைக்க தவறியதற்காக கோவில் மேலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை 24 மணி நேரத்திற்குள் பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோவில் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்ய உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாராட்டினர்.