கன்னியாகுமரி மாவட்டத்தில், தரமான ரப்பர் அதிக அளவு உற்பத்தியாகிறது. விளவங்கோடு, கல்குளம், தோவாளை ஆகிய மூன்று வட்டங்களில், ரப்பர் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது.
ரப்பர் மரங்களில் இலை உதிர்வு காலம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து தொடங்குவது வழக்கம். இலை உதிர தொடங்கியதும் ரப்பர் மரங்களில் பால் உற்பத்தி குறைந்து விடும். எனவே, இந்த காலக்கட்டத்தில் ரப்பர் மரங்களில் இருந்து பால் வடிப்பதை விவசாயிகள் நிறுத்தி வைத்து விடுவார்கள். இதனால் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் முழுமையாக இந்த தொழில் முடங்கும். இந்த ரப்பர் மரங்களில் உள்ள பழைய இலைகள் உதிர்ந்து ஒவ்வொரு மரங்களிலும் புது இலை துளிர்த்து இலை நன்றாக முதிர்ந்து பிறகே பால் உற்பத்தி அதிகரிக்கும். தற்போது, இந்த ஆண்டு ரப்பர் மரங்களில் இருந்து இலை உதிர தொடங்கியதுமே, மரங்களில் பால் உற்பத்தி குறைந்தது. இதனால், பால் வடிக்கும் தொழில் நிறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தொழிலாளர்கள் ரப்பர் மரங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கீரிப்பாறை மற்றும் காளிகேசம் பகுதியிலுள்ள அரசு ரப்பர் தோட்டத்தில் மரங்களில் பால் வெட்டப்பட்டு சேதமடைந்த இடங்களில் கிரீஸ் வைத்து மழையால் நனையாத வண்ணம் பாலிதீன் கவர்களால் மூடி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் பால் வெட்டும் பணிகள் துவங்கப்பட உள்ளது.