கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
'கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம். மிக அழகான கடற்கரைகள், விண்ணை எட்டி நிற்கும் மலைகள், அருவிகள், நீர் நிலைகள் என்று கண் கவர் இயற்கை எழிலை கொண்டது . விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை போன்ற உலக புகழ் வாய்ந்த சுற்றுலா மையங்கள் இங்கு இருக்கிறது. கடந்த வருடம் மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட உள்நாட்டு சுற்றுலா பயணிகளும்,
50, 000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளனர்.
ஆனால் இத்தகைய பெரும் கூட்டத்தினை எதிர் கொள்வதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் கன்னியாகுமரி மாவட்டம் காணப்படுகிறது. அதோடு, சுற்றுசூழலை மேம்படுத்தவும், பாரம்பரிய , இயற்கை வளங்களை பாதுகாக்கவும் வேண்டியது கட்டாயம். எனவே, கன்னியாகுமரி மாவட்டம் மேம்படுத்தப்பட்ட ஒரு சுற்றுலா தலமாக மாற்றுவதன் மூலம் இங்குள்ள மக்களும், சிறு குறு வணிகர்களும் பயனடைவார்கள். வேலை வாய்ப்பினையும் பெருக்க இது காரணமாக அமையும். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ. 2,000 கோடியை சிறப்பு நிதியாக ஒதுக்க வேண்டும். உலக சுற்றுலா வரைபடத்தில் கன்னியாகுமரியை இடம் பெற செய்ய வேண்டும்.'
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.