முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன் படித்த பள்ளி... இப்போது, ஒரு மாணவர் கூட இல்லை !

திமுக முதல் எம்.பியும் முன்னாள் அமைச்சருமான நாஞ்சில் மனோகரன் படித்த அரசு தொடக்க பள்ளியில் படிக்க ஒரு மாணவன் கூட இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரின் முக்கிய வர்த்தக பகுதியும், குடியிருப்புகள் நிறைந்த கோட்டார் பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை துவக்கப்பட்டது. இந்த பள்ளியில் மாணவர்கள் வருகையை அதிகரிக்கவும் பசியை ஆற்றும் வகையில், அந்த பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது உதவியால் மதிய உணவு திட்டமும் , சீருடை திட்டமும் கொண்டுவரப்பட்டது. காமராஜரால் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்னரே இந்த பள்ளியில் மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டதாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர். பின்னர், அரசு தொடக்க பள்ளியாக இயங்கி வந்தது. 50ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு வகுப்பிலும் இரு பிரிவுகளில் நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை அதிக அளவில் மாணவர்கள் இங்கு, படித்து வந்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்கள் வருகை குறைந்து கொண்டே வந்தது. 3 மாணவர்களுடன் ஒரு தலைமை ஆசிரியர் இங்கு பணியில் இருந்தார். இந்த ஆண்டு ஒரு மாணவர் கூட இந்த பள்ளியில் சேரவில்லை. இதனால், மாணவர்கள் இல்லாமல் தலைமை ஆசிரியை மட்டும் வந்து செல்கிறார். மாணவர்களின் வருகைக்காக அவர் காத்திருப்பதை காண முடிந்தது. திமுகவின் முதல் எம்.பி யும் முன்னாள் அமைச்சருமான நாஞ்சில் மனோகரனின் சொந்த ஊர் கோட்டார். இந்த பள்ளியில்தான் அவரும் படித்தார். நாகர்கோவில் பகுதியில் ஏராளமான மருத்துவர்கள், பொறியாளர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் பலரையும் உருவாக்கியுள்ளது இந்த பள்ளி. ஆனால், இப்போது ஒரு மாணவர் கூட இல்லாமல் வெறிச்சோடி கிடப்பது அந்த பகுதி மக்களை மிகுந்த மன வேதனைக்குள்ளாக்கியுள்ளது.