நாகர்கோவில் மணிமேடை ஜங்ஷன் : ஒரு வழிபாதையில் சென்றவர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி

நாகர்கோவிலில் சாலை விதிமுறைகளை மீறி ஒரு வழி பாதையில் சென்ற வாகனங்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர்.

நாகர்கோவில் மணிமேடை ஜங்ஷன் பகுதியில் இருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி வரையுள்ள சாலை குறுகியது. எனவே, இந்த சாலையை ஒரு வழி பாதையாக போக்குவரத்து போலீசார் மாற்றியுள்ளனர். இதனால், போக்குவரத்து நெருக்கடி குறைந்தது. ஆனால், சமீப நாட்களாக ஒருவழிப்பாதை என்பது இருவழி பாதையாக மாறி விட்து. விதியை மதிக்காமல் பலரும் இந்த சாலையை பயன்படுத்தினர்.

இதனால் போக்குவரத்து நெருக்கடியுடன் விபத்தும் அவ்வப்போது ஏற்பட்டது இதையடுத்து, நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின், உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் சுமித் அல்ட்ரின், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முன்பு உள்ள ரவுண்டானா பகுதியில் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். விதிகளை மீறி ஒரு வழி பாதையை பயன்படுத்தியவர்கள், தலைகவசம் அணியாதவர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.