கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு, பிளஸ் 1 மாணவர்கள் தேர்வு எழுத வந்தனர். தேர்வு மையத்துக்குள் அனுப்புவதற்கு முன்பு மாணவர்களை ஆசிரியர்கள் சோதனை செய்தனர். அப்போது , சில மாணவர்களின் பையில் குட்கா இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, அவர்களிடத்தில் ஆசிரியர்கள் விசாரித்த போது, அந்த பகுதியில் உள்ள பெட்டிக் கடையிலிருந்து குட்கா வாங்கியதாக கூறினார்கள்.
இது தொடர்பாக, ஆசிரியர்கள் அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசார் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான அந்த பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். ஆனால், குட்கா ஏதும் சிக்கவில்லை. பின்னர் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். வீட்டின் பின்புறம் இருந்த அறையில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது அங்கிருந்த 30 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்ததுடன் பரமசிவம் மீதும் வழக்கு பதிவு செய்தனர் . அவரின் கடைக்கு சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.