
ரயில்வேத்துறையில் 18 ஆயிரத்து 799 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு முதல்நிலை கணிணித்தேர்வு முடிவடைந்த நிலையில் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 19மற்றும் 20 ஆம் தேதிகளில் இரண்டாம் நிலை கணிணித் தேர்வு(CBT 2) நடைபெற இருந்தது.
தமிழ்நாட்டில் இருந்து 6 ஆயிரம் பேர் இந்த தேர்வு எழுத தகுதிபெற்றிருந்தனர். இதில் 90% பேருக்கு தெலுங்கானா மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாட்டு மாணவர்களுகு 1000 கி.மீ தூரத்திற்கு அப்பால் தேர்வு மையங்கள் ஒதுக்கியது பெரும் சர்ச்சையானது.
எனினும், பல்வேறு சிரமத்திற்கு நடுவில் தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத தயாராக இருந்தனர். இந்த சூழலில் கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால், மிகுந்த ஏமாற்றத்திற்கும், மன உளைச்சலுக்கும் உள்ளான நிலையில் மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து ஆரல்வாய்மொழி சமூக பொது நல இயக்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதன் தலைவர் ஏ.எஸ். சங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பல்வேறு எதிர்பார்ப்புகளோடு வந்த மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். இது ரெயில்வே துறையின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துவதாக உள்ளது. இத்தகைய செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.பல ஆயிரம் கி.மீ பயணம் செய்து தேர்வு எழுத வருபவர்களுக்கு எந்தவித முன் ஏற்படுகளையும் மேற்கொள்ளாதது ரயில்வே தேர்வு வாரியத்தின் மீதான நம்பிக்கையினையே சீர்குலைப்பதாக உள்ளது.
அதிகமான உயர்கல்வி நிறுவனங்கள் செயல்படும் தமிழகத்தில் தேர்வு மையங்கள் அமைக்காதது ஏன்? மாணவர்களை பல ஆயிரம் கி.மீ தூரத்திற்கு அலைய வைப்பதின் மூலமாக அவர்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்குவது நியாயம் தானா..? அரசியல் பழிவாங்குதலுக்கு பலிகடாக்களாக மாணவர்களை பயன்படுத்துவது சரிதானா? தொடரும் வினாக்களுக்கு விடைகள் தான் இல்லை.
தமிழ்நாட்டில் இருந்து தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தேர்வு மையங்களுக்கு சென்ற தேர்வர்களுக்கு உரியஇழப்பீட்டு தொகையினை வழங்கிட வேண்டும். வரும் காலங்களில் தமிழக தேர்வர்களுக்கு அவர்கள் வசிக்கும் அந்தந்த மாவட்டங்களில் தேர்வு மையம் அமைத்து தேர்வினை நடத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.