சிறுவர்களுக்கு பைக் ஓட்ட கொடுக்கிறீர்களா? பெற்றோர்கள் சிறை செல்ல வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல்கண்காணிப்பாளர் லலித்குமார் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் பட்டகசாலியன்விளை பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, வடசேரியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு, பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் மொத்தம் 19 சிறார்களின் பெற்றோர்கள் மீது இளையோர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக "JUVENILE DRIVING CASE" under section 199A Motor Vehicle Act படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் சிக்கும் பெற்றோருக்கும் கீழ் காணும் தண்டனைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

(1) ரூ 25000 அபராதம்
(2) மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை
(3) ஒரு வருடம் வாகன பதிவு ரத்து. வாகனங்கள் வழங்கப்படாது.
(4) சிறார்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்க தடை.

தற்போது, பள்ளி விடுமுறை காலத்தில் சிறார்கள் வாகனங்களை ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்காதீர்கள். இல்லையென்றால் சிறை செல்லும் சூழல் உருவாகும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.