கன்னியாகுமரி : வீணாகும் உலக்கை அருவியின் நீர் அணை கட்டப்படுமா?

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழையாறு, வள்ளியாறு, தாமிரபரணி போன்ற பெரிய ஆறுகள் ஓடுகின்றன. இவற்றில் கலக்கும் சிற்றாறுகளான தூவாறு, நந்தியாறு, முல்லையாறு, கோதையாறு, பரளியாறு, கல்லாறு, மயிலாறு, சாத்தாறு, கிழவியாறு, குற்றியாறு, மாம்பழத்தாறு போன்றவை மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ளன. இங்கு, ஆண்டுக்கு சராசரியாக 1469.7 மில்லிமீட்டர் மழை பொழிகிறது.

ஆனால் போதிய தடுப்பணைகள் கட்டப்படாத நிலையில் தாமிரபரணி ஆற்றின் மூலம் 5200 மில்லியன் கனஅடி, வள்ளியாறு மூலம் 1100 மில்லியன் கனஅடி, பழையாறு மூலம் 5200 மில்லியன் கனஅடி என மொத்தமாக ஆண்டு ஒன்றுக்கு 11000 மில்லியன் கன அடி நீர் கடலில் வீணாக கடலில் கலப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அழகியபாண்டியபுரம் அருகே தூவச்சி பகுதியில் அசம்புமலையில் இருந்து உருவாகும் ஆறு உயரமான மலைப்பகுதியில் இருந்து அருவியாய் கொட்டுகிறது. உலக்கை அருவி என அழைக்கப்படும் இந்த அருவியின் நீரும் எவ்வித பயனும் இல்லாமல் கடலில் கலந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதியில் நாகர்கோவில் மாநகர பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அணை கட்ட ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் ஏனோ அந்த திட்டம் கை விடப்பட்டது.

இந்த அருவியினை சுற்றுலாத்தலமாக்க வேண்டும். உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கண்டு கொள்ளப்படவில்லை. உலக்கை அருவியின் நீரைத் தேக்கி விவசாயத்திற்கும், நிலத்தடி நீர் ஆதாரத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன் அளித்திடும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் அணையினை அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


இது தொடர்பாக சமூக பொது நல இயக்கத்தின் பொதுசெயலாளர் சங்கரபாண்டியன் தலைமையில் குமரி கோட்ட செயலாளர் அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் குழந்தைசாமி, செயலாளர் சந்திரா, விவசாய அணிச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் விவசாயிகள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.