
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு அகஸ்தியர் மலையில் உற்பத்தியாகி பேச்சிப்பாறை அணைக்கு வந்து சேருகிறது. பின்னர் தென்மேற்காக திற்பரப்பு அருவியில் பாய்ந்து செல்கிறது. இதுபோல் . பரளியாறு மகேந்திரகிரி மலையில் மேற்கு பகுதியில் தொடங்கி, தென்மேற்காக பாய்ந்து பெருஞ்சாணி அணையில் சேர்கிறது. இந்த நதி செல்லும் வழி எல்லாம் செழிப்பாக்குகிறது
இந்த இரு ஆறுகளும் திருவட்டார் அருகே மூவாற்று முகம் பகுதியில் சங்கமித்து தாமிரபரணியாக உருவெடுக்கின்றன. பின்னர், தரணி செழிக்க தவழ்ந்து செல்கிறது. தொடர்ந்து, சுமார் 62 கி.மீ தொலைவு பாய்ந்து தேங்காய்பட்டணம் பகுதியில் அரபிக்கடலில் தாமிரபரணி கலக்கிறது. மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கும் அடிப்படையாக இந்த ஆறு உள்ளது.
இந்த ஆறு துவங்கும் மூவாற்று முகம் பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டால் இதன் மூலம் சுற்றுவட்டாரப்பகுதியின் குடிநீர் ஆதாரத்தை பெருக்கிட முடியும். விவசாய தேவைக்கும் பயனுள்ளதாக அமையும். நிலத்தடி நீரும் பெருகும். தடுப்பணை அமைக்கப்பட்டால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தடுப்பணையில் படகு சவாரி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாத்தளமாகவும் மாற்றலாம் என்று கோரிக்கை எழுந்துள்ளது.