திருவட்டார்: ஆபத்தை உணராமல் அருவிக்கரையில் நீராடும் சுற்றுலா பயணிகள்... எச்சரிக்கை பலகை வைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி

Thiruvattar-Tourists-bathing-in-the-riverbanks-without-realizing-the-danger

அருவிக்கரை... இந்த பெயரைப் போலவே இவ்வூரும் மிகவும் அழகு. இந்த ஊரில் பாய்ந்து வரும் பரளியாறு பார்ப்போர் மனதை கொள்ளை கொள்வதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு சங்கமிக்கின்றனர். திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மனாபபுரம் அரண்மனை, தேங்காய்பட்டணம் கடற்கரை வரும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வரத் தவறுவது இல்லை. இப்பகுதியினை குமரன்குடி மற்றும் திருவட்டார் சாலை இணைக்கிறது.

பொங்கி தவழும் அருவியினை கண்டவர்கள் கால் நனைப்பதோடு நில்லாது குளிக்கவும் தவறுவது இல்லை. இதில் தவறு இல்லை தான். அழகுடன் எப்போதும் ஆபத்தும் உள்ளது. இதனை மெய்ப்பிப்பது போல் அழகான இப்பகுதி ஆபத்துக்களையும் மறைத்து வைத்து இருக்கின்றது. இப்பகுதி பல இடங்களில் பாறைகள் நிரம்பியதாகவும், அவை சரிவாக வழுக்கும் தன்மை கொண்டதாகவும், ஆழமான நீரோட்டங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது.

இதனால் இதனை அறியாமல் இங்கு குளிப்பவர்கள் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டு ஜலசமாதியாகும் நிலை உள்ளது. இவ்வாறு இங்கு தொடர்ந்து பல சம்பவங்களில் அநேகர் இறந்து உள்ளனர். இருந்தும் இதனைப் பற்றி அறியாமல் இங்கு வருபவர்கள் ஆற்றுக்கு இரையாகும் அவலம் நடந்தேறி வருகிறது. மேலும் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கும் இன்பமாய் சுற்றுலா வருபவர்களுக்கு துன்பமான அனுபவமாய் அமைந்து விடுகிறது.

இப்பகுதியினை கண்டு களிப்போருக்கும், நீராடி குளிப்போருக்கும் இங்கு உள்ள ஆபத்துக்களை அறிந்து கொள்ளும் விதமாய் இங்கு எச்சரிக்கை பலகை இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் ஆபத்துக்களை அறிந்து கொள்ளாத நிலையில் சுற்றுலா பயணிகள் பாதிப்பிற்கு உள்ளாவதும், உயிர் இழப்புகள் ஏற்படும் நிலையும் தொடர்கிறது. எனவே எச்சரிக்கை அறிவிப்பு பலகையினை இப்பகுதியில் மேலும் காலதாமதம் செய்யாமல் அமைத்திட வேண்டும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நலன்கருதி பாதுகாப்பு பணியில் போலீசார் நியமிக்கபட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொதுசெயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தை சாமி, செயலாளர் Pசந்திரா, துணை தலைவர் S.அருள்ராஜ், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அணி மாவட்ட செயலாளர் L.ஜார்ஜ், திருவட்டார் ஒன்றிய செயலாளர் Y.மரியசெல்வன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.