
நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் கதர் கிராம தொழில் அலுவலகத்தை திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்ய சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் கிராமப்புற தொழில்களை மேம்படுத்திடும் நோக்கத்தில் உதவி இயக்குநர் தலைமையிலான கதர் கிராம தொழில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன்படி குமரி மாவட்ட அலுவலகம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் தேன், மண்பாண்டத் தொழில், சோப்பு, பிரம்பு மூங்கில் பொருட்கள், பாய், சிப்பி மாலை, சுண்ணாம்புத்தொழில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வோர் கூட்டுறவு சங்கமாக செயல்பட்டு கதர் கிராம தொழில் அலுவலகம் மூலம் கடன் உதவி பெற்று தொழில்களை செய்வதோடு உற்பத்தி செய்யும் பொருட்களை இதன் மூலம் விற்பனை செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த அலுவலகத்தின் கீழ் குளச்சல், மார்த்தாண்டம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கதர் அங்காடி செயல்படுகிறது.
இந்த அலுவலக வழிகாட்டுதலின் படி நலிவடைந்த நிலையில் இருந்த பல சிறு, குறு தொழில்கள் வளர்ந்து வருகிறது. மண்பாண்ட தொழில், தேனீ வளர்ப்பு தொழில் உள்ளிட்ட பல தொழில்கள் பல ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரமான நிலையில் தொழிலுக்கு என சுமார் 2 ஆயிரம் பேர் தொழில்கடன் வாங்கி பயன்பெற்று உள்ளனர். மேலும் கைவினை பொருட்கள் உற்பத்தியிலும், விற்பனையிலும் இந்த அலுவலகம் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணத்தால் தமிழகத்தில் உள்ள 8 அலுவலகங்கள் ஏனைய அலுவலகங்களுடன் இணைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன்படி ஊழியர்கள் இல்லாமல் உள்ள நெல்லை மாவட்ட அலுவலகத்துடன் போதிய ஊழியர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வரும் குமரி மாவட்ட அலுவலகத்தை இணைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து குமரி மாவட்ட கதர் கிராம தொழில் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுகிறது.
இதனால் குமரி மாவட்டத்தில் கைவினைத் தொழில்களில் ஈடுபடுவோர் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை உள்ளது. தொழில்கடன் பெற்றவர்களும், பெறுபவர்களும் அலைக்கழிப்புக்கு உள்ளாவதுடன் மாவட்டத்தின் கிராம தொழில் உற்பத்தி பின்னடைவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இத்தகைய இடமாற்றும் நடவடிக்கைக்கு சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதோடு இத்தகைய முடிவினை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர்
T.குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, துணை தலைவர் S. அருள்ராஜ், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் L. ஜார்ஜ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் R.சாராபாய் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.