கன்னியாகுமரி : தற்காலிக பாலம் இல்லாமல் தவிக்கும் அருமநல்லூர் மக்கள்

Kanyakumari-People-of-Arumanallur-are-suffering-without-a-temporary-bridge

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்தில் அருமநல்லூர் ஊராட்சிப் பகுதியில் பழையாறு செல்கிறது.இதனை கடந்துதான் தடிக்காரன்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். ஆற்றை கடந்து செல்ல அமைக்கப்பட்டு இருந்த குறுகிய பாலம் பழுதடைந்த நிலையில் அதனை அகற்றி விட்டு, புதிய பாலம் கட்ட மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து சுமார் ரூ . 44 லட்சம் செலவில் 12 அடி அகலத்தில் புதிய பாலம் கட்ட பணிகள் தொடங்கியது. மக்கள் செல்வதற்கு தனியாக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் இந்த வழியினை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையியால் பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தற்காலிக பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது.

அதன்பிறகு, தற்காலிக பாலம் அமைக்கப்படவில்லை. இதனால் அருமநல்லூர் பகுதி மக்கள் தடிக்காரன்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவ.மாணவிகள்,வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், கடைகளுக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருமநல்லூரில் இருந்து தடிக்காரன் கோணம் செல்ல தற்போது தெரிசனங்கோப்பு அல்லது சுருளோடு சென்று 12 கி.மீ சுற்றிதான் வர வேண்டியதுள்ளது. எனவே, இங்கு தற்காலிக பாலம் உடனடியாக அமைக்க மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.