சித்த மருத்துவம் தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றாகும். சித்தர்களால் உருவாக்கப்பட்ட இத்தகைய மருத்துவம் இயற்கை மூலிகைகள், தாதுக்கள், யோகம், நாடி பரிசோதனை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது.
தமிழகத்தில் சென்னை- அரும்பாக்கம், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அரசு சார்பிலும், குமரி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தனியார் சார்பிலும் சித்த மருத்துவ கல்லூரிகள் செயல்படுகின்றன. இவை எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைகழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் சித்த மருத்துவத்தை மேம்படுத்திடும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ பல்கலைகழகத்தினை அமைக்க முடிவு எடுத்தது. கடந்த 2022 ஏப்27ல் தமிழ்நாடு சட்டபேரவையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக, மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
ஆனால் , பல்கலைக்கு ஆளுனர் ஒப்புதல் தராததால் கிடப்பில் உள்ளது. ஆனால் , சித்த பல்கலைக்கழகம் அமைக்க பொருத்தமான மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். இயற்கை வளங்கள் மற்றும் மூலிகைகள் நிரம்பிய இந்த மாவட்டத்தில் சித்த மருத்துவத்திற்கு தேவையான மூலிகைகள் எளிதில் கிடைக்கின்றன.
குமரி மாவட்டத்தில் உள்ள கிராமபுறங்களில் பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மக்களுக்கு மூலிகை அடிப்படையிலான சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சித்தர்களின் நூல்கள், அனுபவ அறிவை பயன்படுத்தி மருத்துவம் செய்கின்றனர். கன்னியாகுமரி மாவட்ட மக்களின் ஆரோக்கியத்திற்கு சித்த மருத்துவம் பெரும் பங்காற்றி வருகிறது. ஆரல்வாய்மொழி முதல் ஆறுகாணி வரை நீண்டு கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மூலிகைகளின் வாழ்விடமாக உள்ளது.
இயற்கை வளங்களும், பாரம்பரிய அறிவும் இணைந்த குமரி மாவட்டத்தில் சித்த மருத்துவ பல்கலைகழகம் அமைப்பதே பொருத்தமானதாகும். இங்குள்ள பேச்சிப்பாறை மூலிகைப்பண்ணை கவனிப்பாரற்று கிடக்கிறது. அரியவகை மூலிகைகள் நிறைந்த மருந்து வாழ் மலை அழிவின் விளிம்பில் நிற்கிறது.
எனவே, கன்னியாகுமரியில் சித்த மருத்துவ பல்கலை அமைப்பதால் மூலிகை வளம் காக்கப்படுவதோடு மேலும் பல்வேறு ஆய்வுகள் மூலம் சித்த மருந்துவம் உலகளவில் அங்கீகரிக்க வாய்ப்பாகும்.இதனை கவனத்தில் கொண்டு குமரியில் சித்தமருத்துவ பல்கலைகழகம் அமைத்திட அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












