தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக திருச்சி சிவாவை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொது செயலாளர் கன்னியாகுமரி ஆர்.எஸ். ராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது,' நேர்மை எளிமை தொலைநோக்கு பார்வை கொண்ட தன்னலம் பார்க்காமல் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் காமராஜர். பெருந்தலைவரை பற்றி பொய்யான தகவல்களை பொது இடத்தில் பேசியதற்காக திருச்சி சிவாவை வன்மையாக கண்டிக்கிறேன். வரலாற்றை திசை திருப்பும் விதமாக காமராஜரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் பேசிய திருச்சி சிவா திமுக துணை செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும். இல்லையென்றால், தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் எஸ்.ஆர். ராஜன் தலைமையில் சென்னை தி.நகரிலுள்ள காமராஜர் நினைவு இல்லத்தின் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













