சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். ஆனால் மாவட்டத்தில் உள்ள ஏனைய பல்வேறு சுற்றுலாத்தலங்கள் இருப்பினும் அவற்றை சுற்றுலா பயணிகள் அறிந்துகொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையே உள்ளது. இதனை கருதி 2008ல் சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா விழாக்கள் நடத்திட முடிவு எடுத்தது.
இதன்படி முக்கிய சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவி பகுதியில் திருவோணப் பண்டிகையினை ஒட்டி அருவித்திருவிழா இருநாட்கள் நடத்தப்பட்டது. முதல்நாள் கலைநிகழ்ச்சிகள், கலாச்சார ஊர்வலம், அத்தப்பூ கோலப்போட்டி, களியல், படகுத்துறையில் வாத்து பிடிக்கும் போட்டி, பாட்டு மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.
திற்பரப்பு அருவி விழா முடிந்த மறு வாரத்தில் சிதறால் மலைக்கோயில் சுற்றுலாத் திருவிழா நடத்தப்பட்டது. சமண சமய திருத்தலமான இப்பகுதி கடல்மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. மலை உச்சியில் உள்ள கற்கோயில், கற்சிற்பங்கள், வற்றாத குளம், இயற்கை காட்சிகள் காண்பவரின் கண்களை கவரும். உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் இங்கு நடந்த விழாவில் சமய தலைவர்கள், சுற்றுலா பயணிகள், ஆராய்ச்சி மாணவர்கள் பெருமளவில் வருகை தந்தனர்.
சிறப்பாக திற்பரப்பு அருவித் திருவிழாவும், சிதறால் மலைக்கோவில் சுற்றுலா விழாவும் கடந்த 2011 வரை நடந்தது.அதன் பின் கடந்த 13 ஆண்டுகளாக இந்த இருவிழாக்களும் நடத்தப்படவில்லை. இதனால் விழாவோடு சேர்ந்து இப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் மேம்பாட்டுப் பணிகளும் நடைபெறாமல் முடங்கி உள்ளது.
இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 5ம் தேதி ஓணம் கொண்டாடப்பட உள்ள நிலையில் திற்பரப்பு அருவி திருவிழா மற்றும் மலைக்கோயில் சுற்றுலா விழாக்களை மீண்டும் நடத்திட தமிழக அரசும், சுற்றுலாத்துறையும்,மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்திடவேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, விவசாய அணிச் செயலாளர் N.கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.












