கண்டன்விளையில் இரு வருட காலமாய் பூட்டி கிடக்கும் இ.சேவை மையம்... சமூக பொதுநல இயக்கம் புகார்

The-e-service-center-in-Kandanvilai-is-locked-for-two-years

எல்லா இடங்களிலும் கட்டிடங்களை திறந்து வைக்க நிதி ஒதுக்குவார்கள். ஆனால் நிதி ஒதுக்கி செலவு செய்து பின்னர் பூட்டு போட்ட ஒரு கட்டிடத்தை காண விரும்புகிறீர்களா? நம்பினால் நம்புங்கள்...

தோட்டியோடு - திங்கள் சந்தை சாலையில் கண்டன்விளை பகுதியில் தான் இந்த கட்டிடம் உள்ளது. நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் கடந்த 18.11.1978ல் இப்பகுதி குடிநீர் தேவைக்கு என மேல்நிலைக்குடிநீர் தொட்டியினை அப்போதைய நிதி அமைச்சர் நாஞ்சில்.மனோகரன் திறந்துவைத்தார்.

அதன்பின் சுமார் இருவருட காலத்திற்கு முன்பாக நுள்ளி விளை ஊராட்சி சார்பில் SPMRM திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டியின் கீழ்பக்கம் உள்ள காலி இடத்தில் ரூ 41/2 லட்சம் செலவில் கட்டிடம் கட்டப்பட்டு இங்கு இ சேவை மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்பின் இத்திட்டம் கைவிடப்பட்டதால் குறிப்பிட்ட அறை பூட்டிய நிலையிலே காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் பணம் விரயமான நிலையில் குறிப்பிட்ட கட்டிடம் பயனற்று உள்ளது.

குறிப்பிட்ட கட்டிடத்தின் முன் பகுதியில் சாலையோரத்தில் மக்கள் அமர்ந்து செய்திதாள்களை படித்து வருகின்றனர். குறிப்பிட்ட கட்டிடத்தை மக்கள் படிப்பகமாக பயன்படுத்திட அனுமதிக்கலாம். இதனால் இந்த கட்டிடம் பயன் அளிப்பதோடு மக்கள் பல்வேறு சிரமத்தின் நடுவில் சாலையோரம் அமர்ந்து பத்திரிகைகள் வாசிப்பதை தவிர்க்கலாம். அல்லது ஊராட்சியின் ஏனைய எதாவது ஒரு திட்டத்திற்கு என இந்த இடத்தினை பயன்படுத்தலாம்.

மேல்நிலைக்குடிநீர் தொட்டிக்கு கீழ் பகுதி மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் நிர்வாக தரப்பினர் தெரிவிக்கின்றனர். அது உண்மை என்றால் குறிப்பிட்ட பகுதியில் கட்டிடம் கட்ட அனுமதி அளித்தது யார்? இதனால் மக்கள் பணம் விரயமான நிலையில் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது? தடைசெய்யப்பட்ட பகுதியில் அறை கட்டப்பட்டது எனில் அதற்கான தொகை குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து பெறப்படுமா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இதுவரை பதில்கள் இல்லை. எனவே குறிப்பிட்ட இடத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு விட வாய்ப்பு இருப்பின் மேலும் தாமதியாது இந்த கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ் குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, துணை தலைவர் S.ஜேசுராஜ், செயலாளர் P.சந்திரா, தக்கலை ஒன்றிய செயலாளர் T.செபஸ்தியான், விவசாய அணி ஒன்றிய செயலாளர் A.கணபதி, மனநல பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் S. அருள்ராஜ் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.