நிறுத்தப்பட்ட குமரி-கோதையார் பேருந்தினை மீண்டும் விடவேண்டும். சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்

Stopped-Kumari-Kodaiyar-bus-should-be-resumed

கன்னியாகுமரி முதல் கோதையார் வரையிலான வழித்தடத்தில் தடம் எண் 313E கொண்ட இரு அரசு பேருந்துகள் பலகாலமாக இயக்கப்பட்டு வந்தது. இப்பேருந்து நாகர்கோவில், தக்கலை, அழகிய மண்டபம், வேர்கிளம்பி, திருவட்டார், குலசேகரம், களியல், கடையாலுமூடு, சிற்றாறு, சீரோ பாயிண்ட், மூக்கரைக்கல், மோதிரமலை வழியாக கோதையார் பகுதிக்கு இயக்கப்பட்டது.

குமரியில் இருந்து காலை 4.15, மதியம் 11.15 மாலை 7.15 மணிக்கும் கோதையாரில் இருந்து காலை 8 மணி மதியம் 11.15. மாலை 4.15 இரவு 10.30 மணிக்கு இப்பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.

ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தக்கலை மாவட்ட மருத்துவமனை, குலசேகரம் தனியார் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், வேலைக்கு செல்வோர், வடசேரி மற்றும் குலசேகரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள சந்தைக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினரும் இப்பேருந்தால் மிகுந்த பயன்பெற்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பாக இப்பேருந்துகள் நிறுத்தப்பட்டது. சீரோ பாயிண்ட் முதல் கோதையார் வரையிலான மலைப்பகுதியில் உள்ள சாலை பழுதானதால் பேருந்து நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இதனால் பழங்குடி மக்கள், மின்வாரிய பணியாளர்கள், அரசு ரப்பர் கழக ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இச்சாலை கோதையார் மின்உற்பத்தி நிலையம் அமைக்கும் போது உருவாக்கப் பட்டதாகும். இச்சாலையினை மின்வாரியம் பராமரித்து வந்த நிலையில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் சாலை பணிகள் முடங்கியதால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு மலைகிராம மக்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் பேச்சிப்பாறை முதல் மூக்கறக்கல் வரையிலான 6கி.மீ சாலை ரூ 3.60 கோடி செலவிலும் அதன் பின் கோதையார் வரையிலான 8கி.மீ சாலை ரூ 6.29 கோடி செலவிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை பணிகள் இம்மாதம் 13ந்தேதியுடன் முடிவடைந்தது. இருந்தும் நிறுத்தப்பட்ட 313E பேருந்து இதுவரையில் இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தொடர்ந்து அவதிக்கு உள்ளாகி வருவதால் குறிப்பிட்ட பேருந்தினை மீண்டும் இயக்கிட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, துணை தலைவர் S.ஜேசுராஜ்,செயலாளர் P.சந்திரா, மனநல பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் S. அருள்ராஜ், திருவட்டார் ஒன்றிய செயலாளர் Y. மரியசெல்வன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.