அன்றாடம் சாப்பிட வேண்டிய ஐந்து பொருள்கள்

Things to be added every day in diet

by SAM ASIR, Aug 18, 2019, 14:40 PM IST

சமச்சீர் உணவு எல்லோரும் எந்நாளும் சாப்பிட முடிவதில்லை. 'சாப்பாட்டில் என்ன இருக்கிறது?' என்று எதையாவது அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கின்றனர் பலர். நம் வாழ்க்கை முறை, அலுவலகம் மற்றும் தொழிற்சாலை பணி நேரங்கள் இப்படிப்பட்ட கட்டாயத்திற்குள் நம்மை தள்ளிவிட்டிருக்கின்றன.


உண்மையில் சாப்பாடு முக்கியத்துவம் கொடுக்கப்படத் தேவையில்லாத ஒன்றா? கண்டிப்பாக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது உணவுக்குத் தான்! எதையாவது சாப்பிட்டு நிகழ்காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால், முறையாக சாப்பிடதாவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நோய் எதிர்ப்பு சக்தியில்லாமல் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு அவதிக்குள்ளாக நேரிடும்.


நம் உடல் சரியாக செயல்படுவதற்கு வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துகள் அவசியம். எதை சாப்பிட வேண்டும், எதை தவிர்க்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய எளிய உணவுகள் இங்கே தரப்பட்டுள்ளன.


தேன்
செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் ஆகியவை பெரும்பாலும் பெண்கள் எதிர்நோக்கும் உடல்நல கோளாறுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பெண்கள் சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பதே அஜீரணம் மற்றும் மலச்சிக்கலுக்கு காரணமாகிறது.

 

இப்பிரச்னையை தேன் சாப்பிடுவதன் மூலம் தீர்க்கலாம். தேன், உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று. தினமும் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சாப்பிடுங்கள்.
காய்ந்த வெந்தய கீரை
'கசூரி மேத்தி' என்று அழைக்கப்படும் காய்ந்த வெந்தய கீரை, வட இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வாயு தொல்லை மற்றும் இதய கோளாறுகளிலிருந்து குணமளிக்கக்கூடிய தன்மை காய்ந்த வெந்தய கீரைக்கு உள்ளது. உடல் வலியையும் இது போக்கும்.


ஓம விதை
தினமும் சாப்பிட வேண்டியவற்றுள் ஓம விதைக்கும் முக்கிய இடம் உண்டு. ஓம விதைகள் வயிற்றுக்கோளாறுகள் அண்டவிடாமல் பாதுகாக்கும். இவற்றை குழம்பு, கூட்டு போன்றவற்றில் சேர்க்கலாம். தனியாகவும் சாப்பிடலாம். பேறுகாலத்திற்குப் பிறகு பெண்கள் இதை சாப்பிட வேண்டியது அவசியம். இது உடலுள்ள கெட்ட இரத்தத்தை வெளியேற்றும். செரிமானத்திற்கு உதவுவதோடு மூட்டு வலிக்கும் நிவாரணம் தரும்.


எலுமிச்சை
எலுமிச்சை மற்றும் நார்த்தை போன்ற பழங்களை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நன்று. இவற்றில் வைட்டமின் சி சத்து அதிகம் காணப்படுகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் இயல்பும் உண்டு. தினமும் காலை எலுமிச்சை பழச்சாறு பருகினால் உடல் எடை குறையும். எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து அருந்துவது மிகவும் நன்மை தரும். வைட்டமின் சி சத்து சரும நலனுக்கும் தேவையானது. சருமத்திற்கு இயற்கையான முறையில் பளபளப்பை அளிக்கக்கூடிய ஆற்றல் வைட்டமின் சி சத்துக்கு உள்ளது.


ஆளி விதை
'ஃப்ளாக்ஸ் ஸீட்' எனப்படும் ஆளி விதைகளுக்கு ஆக்ஸிஜனேற்ற தடுப்பு பண்பு (ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்) உண்டு. வைட்டமின் பி, இரும்பு மற்றும் புரத சத்துகள் அடங்கிய இவ்விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் அபரிமிதமாக உள்ளது. இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். மன அழுத்தத்தை விரட்டும். பல்வேறு விதமான புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கக்கூடிய இயல்பும் ஆளி விதைக்கு உள்ளது.

You'r reading அன்றாடம் சாப்பிட வேண்டிய ஐந்து பொருள்கள் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை