இனி சோப்பு போட்டு குளிக்காதீங்க...!!!

நொய்யல் ஆற்றில் நுரை.. புதிய விஞ்ஞானி அமைச்சர் ருசிகர தகவல்

Sep 24, 2017, 19:43 PM IST

கடந்த வாரம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத பலத்த மழை பெய்தது.
இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, திருப்பூரில் வெள்ள நீருடன் சாயக் கழிவுகளும் கலந்து சென்றது. இதனால் நொய்யல் ஆற்று நீரில் நுரை பொங்கி வழிந்தது.

இதை பார்த்த சமூக ஆர்வலர்கள், சாயக் கழிவுகளால் நுரை வந்து நொய்யல் ஆறு மாசுபடுவதை உணர்ந்து, இதனை தடுக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட சாய சலவை பட்டறை சங்க நிர்வாகிகள் மற்றும் ஒருசில பொது நல அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் நிறைவடைந்த பிறகு அமைச்சர் கருப்பண்ணனிடம் செய்தியாளர்கள், நொய்யல் ஆற்றில் கலக்கும் நீரில் நுரை வருவது பற்றி கேள்வி எழுப்பினர், அதற்கு அவர் அளித்த பதில் காமெடியாக அமைந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், "நொய்யல் ஆற்றை நேரில் சென்று பார்த்தோம். இங்குள்ள குளங்களாகட்டும், நொய்யல் ஆறாகட்டும், பெரிய பாதிப்புகள் எதுவும் கிடையாது. நொய்யல் ஆற்றிலுள்ள உப்புச்சத்தின் அளவு 1200 முதல் 1300 வரை மட்டுமே உள்ளது. குளத்தில் 700 தான் இருக்கிறது.

குடிக்கும் தண்ணீரில் உப்பு சத்தின் அளவு 500 இருக்கலாம், இங்கு 700 தான் இருக்கிறது.
அதற்குண்டான காரணம் என்னவென்றால், கோயம்புத்தூரில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள் அதிகமாக அந்த ஆற்றில் கலப்பதால் அதிக அளவு நுரை வருகிறது. சோப்பு எல்லோரும் உபயோகப்படுத்துகிறோம். அது கழிவுநீருடன் கலந்து வருவதால் ஒரு இரண்டு நாட்கள் மட்டும் நுரை வந்தது.

நானும் நேரில் சென்று பார்வையிட்டேன். எந்த நுரையும் தற்போது இல்லை. தண்ணீர் மிகவும் சுத்தமாக உள்ளது. எந்த குறையும் தற்போது இல்லை என்பது ஆற்றில் நடந்த ஆய்வு மூலம் தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த பேச்சு சமூக வளைதளங்களில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானது. சமீபத்தில் வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க, அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோல் விரித்த வரலாற்றுப்பதிவுடன் இதனையும் இணைத்து முகநூல் வாசிகள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இனி நொய்யல் ஆற்றை குறித்து சுருக்கமாக காணலாம்...

மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களின் வழியாக ஓடி, கரூருக்கு அருகே காவிரி ஆற்றுடன் கலக்கிறது.

திருப்பூரில் பனியன் ஏற்றுமதி தொழில் கடந்த 30 ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருகிறது, ஆயிரம் சாயப்பட்டறைகளுக்கு மேல் இயங்கி வருகிறது. இந்த சாயப் பட்டறைகள் அனைத்தும் நொய்யல் மற்றும் அதன் துணை ஆறுகளின் கரையோரமாகத்தான் அமைந்திருக்கின்றன.

இந்தச் சாயப்பட்டறைகள் அனைத்திலும் ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டுள்ள புரோசியான் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திதான் துணிகளில் சாயம் ஏற்றப்படுகிறது. தினந்தோறும் இந்தச் சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேறும் 10 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்தம் செய்யப்படாமல் நொய்யலிலும், அதன் துணை ஆறுகளிலும் தான் திறந்து விடப்படுகிறது.

இதன் விளைவாக, முன்னொரு காலத்தில் காஞ்சி மாநதி என்று அழைக்கப்பட்ட நொய்யல், சிறுவாணிக்கு இணையான நதியாக இருந்த நொய்யல், இன்று கழிவுநீர் குட்டையாக, விஷ ஆறாக மாற்றப்பட்டு விட்டது.

திருப்பூரை தாண்டிய பிறகு நொய்யல் ஆற்று நீரை விவசாயத்திற்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது, இதனால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழிந்து விட்டது. தென்னைமரம் தவிர, வேறு சாகுபடி பயிர்கள் எதையும் நோய்யல் ஆற்றங்கரையில் விளைவிக்க முடியாத நிலையில் பல விவசாயிகள் தங்கள் தொழிலை விட்டு நெசவு தொழிலுக்கு மாறியும், இடம் பெயர்ந்தும் போய்விட்டார்கள்.

விவசாயத்தை உயிருக்கு மேலாக காதலித்தவர்கள் பலர் செயற்கை மரணத்தை தழுவிக்கொண்டார்கள். திருப்பூர் சாயப் பட்டறை கழிவு பாயும் நொய்யல் ஆற்றுப் பகுதியில் வாழும் கர்ப்பிணி பெண்கள், நாலாவது மாதத்திற்கு பிறகு அங்கு குடியிருப்பதே இல்லை. ஊரில் கிடைக்கும் கிணற்றுத் தண்ணீரை, குளிப்பதற்குக் கூட கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்து இல்லை.

"இந்த நச்சுக் கழிவால், காற்று, நீர், நிலம் எல்லாம் மாசுபட்டு போனதால், பெண்களுக்குக் கர்ப்பப்பை புற்று நோய் வந்து விடுகிறது. திருப்பூரை வளைத்து போட்டிருக்கும் ஐயாயிரம் முதலாளிகளால், திருப்பூரிலிருந்து கரூர் வரைக்குமுள்ள 300 கிராமங்களில், விவசாயம் அழிந்து, நிலத்தடி நீர் மாசுபட்டு, தண்ணீருக்காக மக்கள் அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய அபாயகரமான தொழிற்சாலைகள் ஆற்றின் கரையில் இருந்து 3 கி.மீ. தள்ளி இருக்க வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், இந்தச் சட்டத்தை சாயப் பட்டறை அதிபர்கள் மருந்துக்கு கூட மதிப்பதில்லை. அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

நொய்யல் ஆற்றுப் பகுதியில் கிடைக்கும் நிலத்தடி நீர் தொழிற்சாலைகளுக்குக் கூடப் பயன்படுத்த முடியாதபடி கெட்டுப் போய்விட்டது. இதனால் திருப்பூர் சாயப் பட்டறைகள், 30 கி.மீ. சுற்றளவில் அமைந்திருக்கும் கிராமங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றன. சாயப் பட்டறைகளால் நிலத்தடி நீர் சுரண்டப்படுகிறது, இதனால் இதனால் திருப்பூரை சுற்றியுள்ள அவினாசி, பல்லடம், பொங்கலூர், சோமனூர் பகுதிகளில் நிலத்தடி நீர் 1200 அடிக்கும் கீழே போய் விட்டது.

பல கிராமங்களில் அன்றாடத் தேவைக்குக் கூடத் தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, கிராம மக்கள் தண்ணீர் லாரியைச் சிறை பிடிப்பதும் சாலை மறியல் செய்வதுமாக போராடி போராடியே தண்ணீர் பெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் வாழ்கிறார்கள்.

இம்மக்களின் நலன் மீது எந்த அக்கறையும் இல்லாமல் பனியன் கம்பெனி பண முதலாளிகளுக்கு ஆட்சியாளர்கள் விலை போய்விட்டதால்... நாம்தான் இனி சோப்பு போட்டு குளிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

You'r reading இனி சோப்பு போட்டு குளிக்காதீங்க...!!! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை