பா.ஜ.க.வுடன் ஜெகன் ரகசிய உறவு கரைக்கப்படுகிறதா தெலுங்குதேசம்?

Is BJP trying to be new Opposition in Andhra Pradesh, Telangana?

by எஸ். எம். கணபதி, Jun 30, 2019, 08:12 AM IST

ஆந்திராவில் noதெலுங்குதேசத்தை கரைத்து 2வது பெரிய கட்சியாக உருவெடுக்க பா.ஜ.க. வேகமாக களமிறங்கியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்கத்தையும், ஒடிசாவையும் பா.ஜ.க. குறிவைத்து கால் பதித்தது. அந்த மாநிலங்களில் பா.ஜ.க. என்ற கட்சியே பெயரளவுக்குத்தான் இருந்தது.

அந்த மாநிலங்களில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கிய காங்கிரஸ் கட்சிக்குள் பல கோஷ்டிப்பூசல்கள் இருந்தன.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 44 தொகுதிகளை மட்டுமே வென்று வீழ்ந்த காங்கிரஸ், அதில் இருந்து மீண்டு வர பெரிய முயற்சிகளை எடுக்கவில்லை. ராகுல்காந்தியை தலைவராக சோனியா கொண்டு வந்தாரே தவிர, ராகுல்காந்தியால் அந்த இடத்தை சரியாக பூர்த்தி செய்ய முடியவில்லை. எந்தெந்த மாநிலங்களில் காங்கிரஸ் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்து அவரால் அதை சரிசெய்யவில்லை.


இந்த சூழலில், மத்தியில் ஆட்சியைப் பிடித்திருந்த பா.ஜ.க., நாடு முழுவதும் மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்க தீவிரமாக களம் இறங்கியது. கட்சிக்கு புதிதாக உறுப்பினர்களை சேர்த்து, கட்சியை வளர்ப்பதற்கு நீண்ட காலம் ஆகும் என்பதால், காங்கிரசை கரைக்கத் தொடங்கியது. அதன்படி, மேற்கு வங்கத்திலும், ஒடிசாவிலும் காங்கிரஸ் கட்சியினரை வளைத்தது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, தனக்கு முக்கிய எதிர்க்கட்சிகளாக உள்ள காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் அழிந்தால் நல்லது என்று பா.ஜ.க.வை கண்டுகொள்ளவில்லை.

 

இதையடுத்து, காங்கிரசையும், கம்யூனிஸ்ட்டையும் அழித்து அங்கு 2வது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்தது. ஒடிசாவிலும் அதே போல் உருவானது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களையும், ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் 8 இடங்களையும் பா.ஜ.க. கைப்பற்றி 2வது இடத்துக்கு முன்னேறி விட்டது.
இதே போல், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 2வது பெரிய கட்சியாக பா.ஜ.க. தற்போது களத்தில் குதித்து விட்டது. தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த 6 ராஜ்யசபா உறுப்பினர்களில் 4 பேரை பா.ஜ.க. வளைத்து விட்டது. இதில், சி.எம்.ரமேஷ், ஒய்.எஸ்.சவுத்ரி உள்ளிட்ட எம்.பி.க்கள் மீது சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குகள் உள்ளன. அந்த நெருக்கடியை சமாளிக்க அவர்கள் பா.ஜ.க.வுக்கு வந்து விட்டனர். இந்நிலையில், ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டியும் ரகசியமாக பா.ஜ.க.வுடன் உறவு கொண்டு, தெலுங்குதேசத்தை கரைக்க உதவுவதாக பேசப்படுகிறது.
முதல் கட்டமாக, சந்திரபாபு நாயுடு கட்டியிருந்த அவரது முகாம் அலுவலகக் கட்டடம் விதிமீறி கட்டப்பட்டதாக கூறி இடிக்கப்பட்டது. அடுத்து, சந்திரபாபு நாயுடுவை அரசு பங்களாவில் இருந்து காலி செய்ய பங்களா வாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும், 4 அமைச்சர்கள் மற்றும் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரி மன்மோகன் அடங்கிய ஒரு குழுவை ஜெகன் நியமித்துள்ளார். இந்த குழு, விரைவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்களை விசாரித்து, முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு தொடர உள்ளதாம்.
ஊழல் வழக்குகளில் சிறைக்கு செல்லாமல் தப்பிக்க வேண்டுமெனில், பா.ஜ.க.வுக்கு வாருங்கள் என்று தற்போது அந்த தெலுங்குதேச புள்ளிகளுக்கு வலை விரிக்கப்பட்டிருக்கிறதாம். பா.ஜ.க.வுக்கு தாவி விட்டால், அவர்கள் மீதான நடவடிக்கைகளை ஜெகன் அரசு தளர்த்தி விடும். காரணம், ஜெகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மத்திய அரசின் சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு போன்றவை தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதுதான். பா.ஜ.க. பதிலுக்கு அந்த வழக்குகளை இறுக்கினால் என்னாவது? முதலமைச்சர் பதவியே ஆட்டம் காணும் நிலை ஏற்படுமே!


ஆக, மத்திய, மாநில அரசுகளின் நெருக்கடிகள் மூலம் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியை கரைப்பதற்கான வேலைகள் தீவிரமாகி இருப்பதாக அக்கட தேசத்து செய்திகள் தெரிவிக்கின்றன. இதே பாணியில், தெலங்கானாவில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசை கரைக்கும் முயற்சியையும் கையில் எடுத்துள்ளது பா.ஜ.க.
எனவே, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஓரிரு ஆண்டில் 2வது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தீவிரமாக பா.ஜ.க.வை எதிர்த்து அரசியல் செய்து கட்சியை தக்க வைத்தால் அது பெரிய விஷயம்தான்.

You'r reading பா.ஜ.க.வுடன் ஜெகன் ரகசிய உறவு கரைக்கப்படுகிறதா தெலுங்குதேசம்? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை