உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எப்போது?- தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

Delay in conducting local body Election, SC questions TN govt

by Nagaraj, Jul 2, 2019, 13:31 PM IST

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை இன்னும் நடத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை 2 வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கெடுவும் விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்தது. அதே ஆண்டு நவம்பரில் தேர்தல் நடத்த அறிவிப்பும் வெளியானது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உள்ளாட்சி அமைப்பில் இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக தொடர்ந்த ஒரு வழக்கில், உயர் நீதிமன்றம் திடீரென தடை விதித்தது.

அதன் பின், ஜெயலலிதா மரணம், அதைத் தொடர்ந்து ஆளும் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல், இரண்டரை வருடங்களுக்கும் மேலாக தள்ளி வைக்கப்பட்டே வருகிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசு நிதி கிடைக்காமல் போய்விட்டது. அத்துடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் பல்வேறு அடிப்படை வசதிகள் கூட செய்ய முடியாமல் உள்ளாட்சி நிர்வாகமும் ஸ்தம்பித்துக் கிடக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் பல தொடரப்பட்டன. இதில் உயர் நீதிமன்றமும் பல முறை கெடு விதித்தும், ஏதேனும் சாக்குப் போக்குகளைக் கூறி தமிழக அரசு வாய்தா பெறுவதிலேயே குறியாக இருந்து வருகிறது. கடைசியாக இந்த ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தயார் என்று மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்திருந்தது. ஆனால் இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.

இதனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இதற்கு தமிழக அரசுத் தரப்பில், மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தொகுதி மறுவரையறை செய்யும் பணி காரணமாக தேர்தலை நடத்த முடியவில்லை எனக் காரணம் கூறப்பட்டது.இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை 2 வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் சீட்; அ.ம.மு.க.வினருக்கு ஆசை காட்டும் அ.தி.மு.க

You'r reading உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எப்போது?- தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை