மும்பையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஹோட்டல் முன் தர்ணா.. கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் அதிரடி கைது

Karnataka minister DK Siva Kumar arrested in Mumbai for sits dharna in front of hotel where the rebel MLAs stayed

by Nagaraj, Jul 10, 2019, 16:22 PM IST

மும்பையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் முன் பல மணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்ட கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி அரசுக்கு எதிராக ஆளும் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 14 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்த அதிருப்தியாளர்கள் தனி விமானத்தில் மும்பைக்கு பறந்தனர். அங்கு நட்சத்திர ஓட்டலில் பத்திரமாக தஞ்சமடைந்துள்ளனர். குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது, பாஜக தான் சதி செய்கிறது. அதிருப்தி எம்எல்ஏக்களையும் மும்பைக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கும் ஏற்பாடுகளை எல்லாம் பாஜக தான் செய்து வருவதாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை, அமைச்சர் பதவி ஆசை காட்டி சமாதானம் செய்ய காங். மற்றும் மஜத தலைவர்கள் இறுதிக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக இரு கட்சிகளையும் சேர்ந்த அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக பதவியை ராஜினாமா செய்து விட்டனர். இப்படி அமைச்சர் பதவி தருவதாக கிரீன் சிக்னல் காட்டியும் அதிருப்தி எம்எல்ஏக்கள் மசியவில்லை. மாறாக தாங்கள் மும்பை பாந்த்ரா பகுதியில் தங்கியிருந்த சோபிடால் நட்சத்திர ஹோட்டலில் இருந்து வெளியேறி ரகசிய இடத்தில் தங்க ஆரம்பித்தனர். இப்போது மும்பையின் போவாய் பகுதியில் ரெனாய்ஸன்ஸ் என்ற சொகுசு ஹோட்டலில் தங்கியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இந்த அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திப்பதற்காக காங்கிரஸ் கட்சியில் 'டிரபுள் சூட்டர்' என்று கூறப்படும் அமைச்சர் டி.கே.சிவக்குமார், மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ தேவகவுடா என்பவருடன் இன்று மும்பை சென்றார்,
டி.கே.சிவக்குமார் மும்பை வந்துள்ள தகவல் அறிந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் பீதியடைந்தனர். எந்தப் பிரச்னைகளையும் எதிர்கொள்வதில் சகலகலா கில்லாடியான சிவக்குமார், தங்களை கட்டாயப்படுத்தி கடத்திச் சென்று விடுவார் என்ற பீதியில், பாதுகாப்பு கேட்டு மும்பை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்தனர். இதனால் அந்த ஹோட்டல் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், போலீஸ் குவிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் ஹோட்டலில் தங்கி இருப்பவர்கள் எங்கள் சகாக்கள் தான். அவர்களை சந்தித்துப் பேசப் போகிறேன் என்று கூறி, மஜத தலைவர் தேவ கவுடாவுடன் அமைச்சர் டி.கே.சிவக்குமார் ஹோட்டலுக்குள் செல்ல முயன்றார். ஆனால் ஹோட்டல் வாசலிலேயே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, உள்ளே செல்ல அனுமதி மறுத்து விட்டனர். தானும் ஹோட்டலில் ரூம் புக் செய்துள்ளதாகவும், அங்கு தங்கியுள்ள நண்பர்களுடன் ஆலோசனை நடத்த வந்துள்ளதாகவும், யாரையும் கடத்திச் செல்ல வரவில்லை என்று கூறி சிவக்குமார் போலீசாருடன் வாக்குவாதம் செய்தும் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் ஹோட்டலுக்குள் அனுமதிக்கும் வரை இங்கிருந்து நகரமாட்டேன் என்று கூறி அமைச்சர் டி.கே.சிவக்குமார் தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது மழை பெய்த போதும் குடை பிடித்தபடி ஹோட்டல் வாசலிலேயே காத்துக் கிடக்க ஆரம்பித்தார். காலை உணவு, டீ போன்றவற்றையும் ஹோட்டல் வாசலியே சாப்பிட்டார். நேரம் செல்லச் செல்ல மும்பையைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் களும் சிவக்குமாருக்கு ஆதரவாக குவிந்து கோஷமிட்டனர்.. இதனால் ஹோட்டல் முன்பு பதற்றம் ஏற்பட்டது.காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்தப் போராட்டம் மதியம் 2 மணி வரை நீடித்தது. பிடிவாதமாக அமைச்சர் டி.கே.சிவக்குமார் தர்ணா போராட்டத்தை தொடர்ந்ததால் அவரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே ஹோட்டலில் தங்கியிருந்த 14 எம்எல்ஏக்களும், ஹோட்டலின் பின் வாசல் வழியாக வெளியேற்றப்பட்டு, வேறு ஒரு ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்கிறது... காங்., - மஜத எம்எல்ஏக்கள் 13 பேர் ராஜினாமா?

You'r reading மும்பையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஹோட்டல் முன் தர்ணா.. கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் அதிரடி கைது Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை