ராஜ்யசபா தேர்தல்: வைகோ உள்ளிட்ட 6 பேர் போட்டியின்றி தேர்வு

Rajya sabha election, 6 candidates including vaiko, anbumani Ramadoss unanimously elected

by Nagaraj, Jul 11, 2019, 17:18 PM IST

ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு வரும் 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் திமுக சார்பில் தொமுச தலைவர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன், கூட்டணியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், சந்திரசேகரன் ஆகியோருடன், கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்பு மனு செய்தனர்.

இந்நிலையில் தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவருடைய வேட்பு மனு தள்ளுபடி ஆகலாம் என்ற சர்ச்சை எழுந்தது. இதனால் அவசர, அவசரமாக கடைசி நாளில் திமுக சார்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வேட்பு மனு தாக்கல் செய்தார். வைகோ மனு ஏற்கப்பட்டால் இளங்கோ மனுவை வாபஸ் பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வேட்பு மனு பரிசீலனையின் போது, வைகோவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் என்.ஆர். இளங்கோ, தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து 6 எம்.பி. இடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்பாளர்களாக இருந்தனர்.

இந்நிலையில் வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் சண்முகம், வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும், அதிமுகவின் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வாகியுள்ளனர். இவர்கள் 6 பேரும் ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை சட்டப்பேரவை செயலாலர் சீனிவாசன் வழங்கினார்.

You'r reading ராஜ்யசபா தேர்தல்: வைகோ உள்ளிட்ட 6 பேர் போட்டியின்றி தேர்வு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை